ஆம்புலன்ஸுக்குப் பணமில்லை! பெண்ணின் உடலைச் சுமந்து சென்ற மகன், கணவன்!

ஆம்புலன்ஸுக்குப் பணமில்லாததால் இறந்த தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி மகனும், கணவனும் தோளில் சுமந்து சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸுக்குப் பணமில்லை! பெண்ணின் உடலைச் சுமந்து சென்ற மகன், கணவன்!

கொல்கத்தா: ஆம்புலன்ஸுக்குப் பணமில்லாததால் இறந்த தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி மகனும், கணவனும் தோளில் சுமந்து சென்றுள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், மாவட்ட சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஒடிசாவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட கலாஹண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் மனைவியின் உடலை சுமந்துகொண்டு  சென்ற சோகமான சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், மேற்கு வங்க மாநிலத்தின் கிராந்தி கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது  மனைவியின் உடலை மகனுடன் சேர்ந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் மக்கள் கூட்டம் நிறைந்த ஜல்பைகுரின் மாவட்ட தலைமையகம் அமைந்துள்ள சாலையில் சுமந்து செல்வதைப் பார்த்தோரின் நெஞ்சை பதற வைத்தது.

மேற்கு வங்க மாநிலம், கிராந்தி கிராமத்தில் வசித்து வருபவர் ராம் பிரசாத் திவான். இவருடைய தாயாருக்கு புதன்கிழமை சுவாசப் பிரச்னை இருந்ததால் சிகிச்சைக்காக 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து தாயாரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆம்புலன்ஸுக்கு கட்டணமாக ரூ.3.000 கேட்கப்பட்டது. வயதான அவரது தந்தை ஜெய்கிருஷ்ணா திவான் தன்னிடம் இருந்த ரூ.1,200 கொடுத்து கைகளை கூப்பி மனைவி லக்கிராணி உடலை சொந்த ஊருக்கு எடுத்து வந்து தருமாறு கெஞ்சினார். வரமுடியாது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறிவிட்டனர். 

இதையடுத்து தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் சாலையில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினார். தாயின் மற்றொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்து கொண்டு சென்றார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் பெரும் வைரலானது. இறுதியாக, இதனை நேரில் கண்ட சமூக சேவை நிறுவனம் ஒன்று முன்வந்து உடலை எடுத்துச் செல்வதற்கான இலவச ஆம்புலன்ஸ் வசதியை செய்து தந்தது.

இது குறித்து  ராம் பிரசாத் கூறியதாவது: “எனது தாய் இறந்த பிறகு, நாங்கள் அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு மருத்துவமனை அதிகாரிகளிடம் ஆம்புலன்ஸ் கேட்டோம். ஆனால், அவர்கள் எங்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை. 

இதையடுத்து தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் சென்று கேட்டதற்கு ரூ.3,000 கேட்டனர். எனது தந்தை தன்னிடம் இருந்து ரூ.1,200 இருக்கிறது,'' என்று கொடுத்து, எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது என்று கெஞ்சினார். நோய்வாய்ப்பட்ட தாயை தனது இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு (40 கிமீ) கொண்டு வருவதற்கு அதே ஆம்புலன்ஸுக்கு ரூ.900 கொடுத்து வந்தோம். 

வேறு வழியின்றி தாயின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி நானும், எனது தந்தையும் தோளில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.  

"மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது, சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் எங்களுக்கு உதவ முன்வராமல், தங்கள் செல்போன்களைப் பயன்படுத்தி காட்சியைப் பதிவு செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் கவணமாக இருந்தனர்," என்று ராம்பிரசாத் கூறினார்.

மக்கள் கூட்டம் நிறைந்த சாலையில் தந்தையும் மகனும் தாயின் உடலை சுமந்துகொண்டு நடக்கத் தொடங்கியபோது, அந்த சோகமான சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சமூக பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களால் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸில் ராம்பிரசாத் தாயின் உடல் ஏற்றப்பட்டு திவான் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்த சமூக பொதுநல அமைப்பின் நிர்வாகி கூறுகையில் "இது போன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்களை மருத்துவமனை அருகே கூட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அனுமதிப்பது இல்லை" என வேதனையுடன் கூறினார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், மாவட்ட சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. 

இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கூறுகையில், மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல் நடந்துள்ளது. “அரசு  மருத்துவமனையில் இருந்து சம்ந்தப்பட்ட குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யப்படாதது ஏன் என்பதை விசாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக அலுவலகம் ஒன்று 24 மணி நேரமும் செயல்படுகிறது. அங்கு இது குறித்து கேட்டிருந்தால் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து தந்திருக்க முடியும். அவர்களுக்கு இதுகுறித்து தெரியாமல் போய் விட்டது. அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை" என விளக்கம் அளித்தவர், எங்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com