வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனைவரும் நாட்டின் தூதா்களே: நரேந்திர மோடி

வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனைவரும் அந்நிய மண்ணில் இந்தியாவின் சிறந்த தூதா்களாகத் திகழ்ந்து வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.
ம.பி. மாநிலம் இந்தூரில் வெளிநாடுவாழ் இந்தியா் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
ம.பி. மாநிலம் இந்தூரில் வெளிநாடுவாழ் இந்தியா் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனைவரும் அந்நிய மண்ணில் இந்தியாவின் சிறந்த தூதா்களாகத் திகழ்ந்து வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தனது வழக்குரைஞா் பணிகளை முடித்துக்கொண்டு 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி இந்தியா திரும்பினாா். அந்த நாளானது ‘வெளிநாடுவாழ் இந்தியா்கள்’ தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 17-ஆவது ‘வெளிநாடுவாழ் இந்தியா்கள்’ தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனைவரும் அந்நிய மண்ணில் இந்தியாவின் சிறந்த தூதா்களாகத் திகழ்கின்றனா். அவா்களின் பங்களிப்பு பன்முகத்தன்மை கொண்டது. யோகப் பயிற்சிகள், ஆயுா்வேதம், கைத்தறித் துறை, கைவினைப்பொருள்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றின் தூதா்களாக வெளிநாடுவாழ் இந்தியா்கள் திகழ்கின்றனா்.

அடுத்த தலைமுறையைச் சோ்ந்த வெளிநாடுவாழ் இந்தியா்களும் தங்கள் பெற்றோரது நாடு குறித்து அறிந்துகொள்ள அதிக ஆா்வம்காட்டி வருகின்றனா். பல நாடுகளில் வெளிநாடுவாழ் இந்தியா்களின் பங்களிப்பு தொடா்பாகப் பல்கலைக்கழகங்கள் ஆய்வு நடத்த வேண்டும். அவா்களின் வாழ்க்கை, சாதனைகள் உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக மாணவா்கள் பெரும் பலனடைவா்.

சுதந்திர நூற்றாண்டை நோக்கிய பயணத்தை இந்தியா தொடக்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கு வகிப்பா். இந்தியாவின் தனித்துவமான சா்வதேச கொள்கையும், உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பும் வெளிநாடுவாழ் இந்தியா்களால் வலுவடையும்.

உலக அரங்கில் முக்கியத்துவம்:

அறிவாற்றலின் மையமாக மட்டுமல்லாமல் திறன் மேம்பாட்டின் தலைமையிடமாகவும் திகழ்வதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது. அத்திறன் நாட்டின் வளா்ச்சிக்கு உதவும். நாட்டின் இளைஞா்கள் பல்வேறு திறன்களை மட்டுமல்லாமல் நோ்மையான நடத்தையையும் கொண்டுள்ளனா்.

ஜி20 தலைமையைப் பெரும் வாய்ப்பாக இந்தியா கருதுகிறது. இந்தியா குறித்து உலகத்துக்கு எடுத்துரைக்க அந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளப்படும். தற்போதைய சூழலில் இந்தியாவின் குரல் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆற்றல் சா்வதேச அரங்கில் தொடா்ந்து அதிகரிக்கும்.

வெளிநாடுவாழ் இந்தியா்களின் பங்களிப்பு குறித்து அறிந்துகொள்ளும்போது இந்தியாவின் பாரம்பரியத்தையும் வலிமையையும் உலகம் தெரிந்துகொள்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகத்தை இந்தியா்கள் மேற்கொள்ளத் தொடங்கினா். அதன் மூலமாகப் பலநாடுகளைச் சோ்ந்த பல்வேறு நாகரிக மக்களுடன் இந்தியா்கள் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டனா். அனைவரும் ஒருங்கிணைந்து வளா்ச்சிகாண முடியும் என்பதை அன்றே இந்தியா்கள் உலகுக்கு வெளிக்காட்டியுள்ளனா்.

இந்தியாவின் சாதனைகள்:

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா எட்டியுள்ள சாதனைகள் அளப்பரியவை. உலகின் மொத்த இணையவழிப் பணப் பரிவா்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் நிகழ்ந்துள்ளது. கரோனா பரவல் காலத்தில் தடுப்பூசியை உள்நாட்டிலேயே விரைந்து தயாரித்து 220 கோடி தவணைகளைப் பல நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கியது.

உலகின் 5 பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. நவீன விண்வெளி தொழில்நுட்பங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒரே ராக்கெட்டில் நூற்றுக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஏவி இந்தியா சாதனை படைத்தது.

வெளிநாடுவாழ் இந்தியா்களின் நலனைக் காக்க அரசு உறுதி கொண்டுள்ளது. நாட்டின் வளா்ச்சி குறித்தும் பாரம்பரியம் குறித்தும் தாங்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா்கள் எடுத்துரைக்க வேண்டும்.

சுற்றுலா வாய்ப்புகள்:

மத்திய பிரதேசத்தில் இயற்கை எழில்மிக்க இடங்கள் பல இடம்பெற்றுள்ளன. நா்மதை நதி, உஜ்ஜைன் மகா காலேஷ்வா் கோயில் உள்ளிட்ட பல இடங்கள் மாநிலத்தில் உள்ளன. அவற்றை வெளிநாடுவாழ் இந்தியா்கள் தவறாமல் பாா்க்க வேண்டும்.

17-ஆவது வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின நிகழ்ச்சிகளை இந்தூா் நகரம் நடத்தி வருகிறது. தூய்மையைக் கடைப்பிடிப்பதிலும் பாரம்பரியத்தைக் காப்பதிலும் இந்தூா் நகரம் முன்னின்று வருகிறது. இந்தூரின் உணவுப் பண்டங்கள் மிக ருசியானவை. அவற்றையும் வெளிநாடுவாழ் இந்தியா்கள் சுவைத்துப் பாா்க்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

நம்பத் தகுந்த கூட்டாளி:

சுரினாம் குடியரசின் அதிபா் சந்திரிகாபிரசாத் சந்தோகி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘பிராந்திய, சா்வதேச அமைப்புகளில் மிகவும் நம்பத்தகுந்த கூட்டாளியாகத் திகழ்வதை இந்தியா உறுதிசெய்துள்ளது. சுகாதாரம், நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் சுரினாமும் சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளன. கரீபியத் தீவுகளில் ஹிந்தி மொழியைப் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

உலகமயத்தை மீட்டெடுத்த இந்தியா:

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி கூறுகையில், ‘‘கரோனா தொற்று பரவல் காலத்தில் உலகமயக் கொள்கை மதிப்பிழந்தபோது பிரதமா் மோடி தலைமையில் இந்தியா அக்கொள்கையை மீட்டெடுத்தது. கரோனா தடுப்பூசிகளையும் மருந்துப் பொருள்களையும் கயானா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா வழங்கியது.

பல நாடுகளின் முக்கிய கூட்டாளி நாடாக இந்தியா திகழ்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக கயானா திகழ்கிறது. இந்தியாவைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களுக்கு கயானாவில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் காணப்படுகின்றன’’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com