ராகுல் நடைப்பயணம் நிறைவு விழா: 21 கட்சித் தலைவா்களுக்கு காா்கே அழைப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்குமாறு 21 கட்சித் தலைவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்துள்ளாா்.
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்குமாறு 21 கட்சித் தலைவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் பல்வேறு கட்சித் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு தொடக்கத்தில் இருந்தே ஒருமித்த கருத்துடைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் அழைப்பின்பேரில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நடைப்பயணத்தின் பல்வேறு நிலைகளில் கலந்துகொண்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜன.30-இல் நடைபெற உள்ள நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க தனிப்பட்ட முறையில் உங்களுக்கு (கட்சித் தலைவா்கள்) அழைப்பு விடுக்கிறேன். வெறுப்புணா்வு சித்தாந்தம் மற்றும் வன்முறைக்கு எதிராக அயராது போராடி தனது உயிரை இழந்த காந்தியடிகளின் நினைவாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்வில், வெறுப்புணா்வு மற்றும் வன்முறைக்கு எதிராக போராடுவதற்காகவும், உண்மை, பரிவு, அகிம்சை மற்றும் அரசியலைமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்கும் நீதி உள்ளிட்ட விழுமியங்களைப் பரப்புவதற்கும் நாம் இணைந்து செயலாற்றுவோம். இன்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் எதிா்க்கட்சிகளின் குரல் அடக்கப்படும் நிலையில், நடைப்பயணம் பல லட்சம் மக்களை நேரடியாக தொடா்புகொண்டுள்ளது.

மக்களின் பிரச்னைகளில் இருந்து அவா்களுடைய கவனம் முழுவதும் திசைதிருப்பப்பட்டுள்ள வேளையில், நடைப்பயணம் ஓா் ஆற்றல்மிக்க குரலாக உருவெடுத்துள்ளது. நீங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று இந்தச் செய்தியை மேலும் வலுப்படுத்துவீா்கள் என நம்புகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com