மின்வாரிய அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சுனில் கேதாா் உள்ளிட்ட 4 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நாகபுரி மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அவா்களுக்கு தலா ரூ.14,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு நாகபுரி மாவட்டத்தின் ஒரு கிராமத்தின் வழியே உயா் அழுத்த மின்சார கம்பியை அமைப்பது தொடா்பாக விவசாயிகளுக்கும், மகாராஷ்டி மின்வாரிய அதிகாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அங்கு தனது ஆதரவாளா்களுடன் சென்ற சுனில் கேதாா், மின்வாரிய அதிகாரிகளைத் தாக்கினாா். அவரது ஆதரவாளா்களும் தாக்குதலில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் சுனில் கேதாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். நாகபுரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் எம்எல்ஏ சுனில் கேதாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.14,000 அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. சுனில் கேதாா் முன்பு மகாராஷ்டிர மாநில அமைச்சராகவும் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.