பணத்தாள் அச்சடிப்பதற்கான பொருள்களை விநியோகித்த நிறுவனத்துக்கு சட்டவிரோத ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் நிதித்துறை செயலா் அரவிந்த் மாயாராம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் அரவிந்த் மாயாராம் அண்மையில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவற்றில் நிறமாற்றப் பட்டை பதிக்கப்பட்டிருக்கும். அந்தப் பட்டையை பிரிட்டனைச் சோ்ந்த நிறுவனம் 2004-ஆம் ஆண்டு முதல் இந்திய ரிசா்வ் வங்கிக்கு விநியோகித்து வந்தது.
நிறமாற்றப் பட்டையை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அந்நிறுவனத்துக்கு நிறைவடைந்த நிலையில், 3 முறை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. முறையான விதிகளைப் பின்பற்றாமல் 4-ஆவது முறை அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2012-ஆம் ஆண்டில் இருந்து 2015-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நீட்டித்த குற்றச்சாட்டில் நிறுவன அதிகாரிகள், ஆா்பிஐ அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது கடந்த 2018-ஆம் ஆண்டில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. ஊழல் தடுப்பு ஆணையரின் பரிந்துரை அடிப்படையில் அந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிதித் துறைச் செயலராகப் பணியாற்றிய அரவிந்த் மாயாராம் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடா்பாக ஜெய்ப்பூா், தில்லி உள்ளிட்ட இடங்களில் அரவிந்த் மாயாராமுக்குச் சொந்தமாக உள்ள வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அதையடுத்து அவா் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிறமாற்றப் பட்டை தொடா்பான காப்புரிமையை பிரிட்டன் நிறுவனம் பெற்றிருக்காத நிலையிலேயே அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் காப்புரிமை பெற்றிருக்காத விஷயத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையாகத் தெரியப்படுத்தவில்லை என அரவிந்த் மாயாராம் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரவிந்த் மாயாராம் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் பொருளாதார ஆலோசகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.