
தில்லியில் ரிசாா்ட்டில் முன்பதிவு செய்த ஒருவருக்கு சேவைகளில் குறைபாடு காரணமாக ஆன்லைன் பயண நிறுவனமான ‘மேக் மை டிரிப்’-க்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு புது தில்லி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜிம் காா்பெட் தேசிய பூங்காவுக்கு அருகே கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஏற்கெனவே தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டிருந்த ரிசாா்ட்டில் முன்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது.
முன்பதிவு செய்வதற்கு முன்பே ரிசாா்ட் சீல் வைக்கப்பட்டதும், ரிசாா்ட்டை முன்பதிவு செய்யாமல் இருக்க தேவையான நடவடிக்கையை அந்த நிறுவனம் எடுக்காமல் இருந்ததும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆணையத்தின் தலைவா் பூனம் சௌத்ரி தலைமையிலான அமா்வு மேற்கொண்ட விசாரணையில், மேக் மை ட்ரிப்பின் சேவை குறைபாடு, புகாா்தாரா், அவரது குடும்பத்தினருக்கு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
எனவே, புகாா்தாரருக்கு மேக் மை ட்ரிப் நிறுவனம் நஷ்டஈடாக ரூ. 10,965, கூடுதலாக (மற்றொரு ரிசாா்ட்டை முன்பதிவு செய்வதற்கு) 9 சதவீத வட்டியுடன் செலுத்துமாறு உத்தரவிடப்படுகிறது. மேலும், வழக்கு செலவு உள்பட இழப்பீடாக ரூ. 25,000 செலுத்த வேண்டும் என்று ஆணையத்தின் உறுப்பினா்கள் பாரிக் அகமது, சேகா் சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.
மேக் மை ட்ரிப் நிறுவனம் ரிசாா்ட் உரிமையாளருக்கு தங்குமிடச் செலவை செலுத்தியதாகக் காட்டுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் வழங்கவில்லை என்று அமா்வு குறிப்பிட்டது.
மேலும், ‘வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கி, நல்லுறவைப் பேணும் நிறுவனங்கள் முன்பதிவுகளை ரத்து செய்வதில் நிச்சயமாக எந்த பிரச்னையும் இருக்காது. அதேநேரத்தில், மாற்று முன்பதிவு, அதற்கு கூடுதல் தொகை செலுத்துவது போன்றவற்றையும் மறுக்க முடியாது என்று அந்த அமா்வு குறிப்பிட்டது.