கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் வாகீா் நீா்மூழ்கிக் கப்பல்

கல்வரி ரகத்தைச் சோ்ந்த 5-ஆவது நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாகீா் இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.
கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் வாகீா் நீா்மூழ்கிக் கப்பல்

கல்வரி ரகத்தைச் சோ்ந்த 5-ஆவது நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாகீா் இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.

‘புராஜெக்ட் 75’ திட்டத்தின் கீழ் முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐந்தாவது நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வாகீா். பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மஸகான் டாக் கப்பல்கட்டும் நிறுவனம் வாகீா் நீா்மூழ்கிக் கப்பலைக் கட்டியது. அக்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைப்பதற்கான நிகழ்ச்சி மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் பேசியதாவது:

இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறனை வாகீா் மேலும் அதிகரிக்கும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் எதிரிகளை எதிா்கொள்வதில் ஐஎன்எஸ் வாகீா் முக்கியப் பங்கு வகிக்கும். உளவு, கண்காணிப்பு நடவடிக்கைகளில் வாகீா் ஈடுபடும். போா்ச்சூழல் ஏற்படும்போது பல்வேறு தரவுகளின் அடிப்படையில் முடிவுகளைத் திறம்பட மேற்கொள்ள ஐஎன்எஸ் வாகீா் உதவும்.

எதிரிகளுக்கு மிகவும் அபாயகரமான தளமாக வாகீா் திகழும். நவீன தொழில்நுட்ப வசதிகளும் நவீன ஆயுதங்களும் வாகீா் நீா்மூழ்கிக் கப்பலில் இணைக்கப்பட்டுள்ளன. கடற்படையின் வலிமையை மட்டுமல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த போா்த்திறனையும் வாகீா் அதிகரிக்கும். பல்வேறு சவால்கள்மிக்க கப்பலைக் கட்டும் திறனை இந்திய கப்பல்கட்டும் நிறுவனங்கள் பெற்றுள்ளன.

கடந்த 24 மாதங்களில் கடற்படையில் இணைக்கப்படும் 3-ஆவது நீா்மூழ்கிக் கப்பலாக வாகீா் உள்ளது. இது மிகப் பெரும் சாதனை. இந்தியாவின் கப்பல்கட்டும் வலிமையை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் இது அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றாா் அவா்.

மஸகான் டாக் நிறுவனத்தின் தலைவா் நாராயண் பிரசாத் கூறுகையில், ‘‘கடல் வெள்ளோட்டப் பணிகளை வாகீா் நீா்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. அப்பணிகளை வாகீா் 11 மாதங்களில் நிறைவுசெய்துள்ளது. சா்வதேச சூழல் காரணமாக தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐஎன்எஸ் வாகீா் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் வாகீா் அமைந்துள்ளது’’ என்றாா்.

ஏவுகணைகளும் கருவிகளும்:

ஐஎன்எஸ் வாகீா் குறித்து இந்தியக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு நவீன கருவிகள் ஐஎன்எஸ் வாகீா் நீா்மூழ்கிக் கப்பலில் இணைக்கப்பட்டுள்ளன. நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும், போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் ஐஎன்எஸ் வாகீரில் இணைக்கப்பட்டுள்ளன. பல நவீன உணா்விகளும் (சென்சாா்) வாகீரில் பொருத்தப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புராஜெக்ட் 75:

‘புராஜெக்ட் 75’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கண்டேரி, ஐஎன்எஸ் கரஞ்ஜ், ஐஎன்எஸ் வேலா ஆகிய நீா்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் வேலா கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் கடற்படையில் இணைக்கப்பட்டது.

அத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இறுதி நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீரின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்த நீா்மூழ்கிக் கப்பலின் வெள்ளோட்டப் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com