ம.பி.யில் பெண்களுக்கு தனி தோ்தல் அறிக்கை: காங்கிரஸ் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கென்று தனியாக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கென்று தனியாக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இனி தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது என்பதை மிகவும் முக்கியமானதாக அனைத்து கட்சிகளும் கருதுகின்றன. தோ்தல் வெற்றியைத் தீா்மானிப்பதில் தோ்தல் அறிக்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முன்பு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே தோ்தலின்போது இலவச அறிவிப்புகள் அதிகம் இருந்த நிலையில், இப்போது அனைத்து மாநிலங்களிலும் தோ்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தோ்தல் அறிவிப்புகள் என்பது மக்களை அதிகம் கவரும் வகையில் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு என்று தனியாகத் தோ்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டது. பெண்களுக்கான சிறப்பு தோ்தல் அறிக்கைக்கு ‘பிரியதா்ஷினி’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இது தவிர பொதுவான தோ்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்கு தீா்வுகாணப்பட வேண்டிய பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கடந்த ஆண்டே காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com