
எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனை சேவைகள், கோ-வின் போன்ற இந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளால் கோடிக்கணக்கில் சேமிக்க முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் முதல்முறையாக இந்திய தொழில்நுட்பங்கள் உருவாக்குவோா் மாநாடு புதன்கிழமை நடைபெற உள்ளது. இதுதொடா்பாக மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய தொழில்நுட்பங்கள் உருவாக்குவோா் மாநாட்டில் பல்வேறு நாடுகள், தொழில் துறை, ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் உள்ளிட்டவை சாா்பில் 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதன் மூலம், இந்திய தொழில்நுட்பங்களை எந்த செலவும் இல்லாமல் வெளிநாடுகள் பயன்படுத்த உதவப்படும். இந்தத் தொழில்நுட்பங்களுக்காக முன்பு பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வெளிநாடுகள் செலவிட்டு வந்தன.
எண்ம பணப் பரிவா்த்தனை சேவைகள், கோ-வின் போன்ற இந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளால் கோடிக்கணக்கில் சேமிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத் தளங்களைப் பகிா்ந்துகொள்வதற்கு எந்த வகையிலும் இந்தியா கட்டணம் வசூலிக்காது. ஜி20 கூட்டமைப்பின் தலைவராக இந்தியாவுக்குப் பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பின் அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தாா்.
இதனிடையே சமூக ஊடகத்தில் போலி அல்லது தவறான தகவல் என்று கருதினால், அந்தத் தகவல் பகிரப்படாமல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-இல் திருத்தத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவு குறித்து அடுத்த மாதத் தொடக்கத்தில் சம்பந்தப்பட்டவா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.