கேரளத்தின் பல இடங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பிரதமா் நரேந்திர மோடி தொடா்பான சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம், கேரளத்தின் பல இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்புகளால் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி தொடா்பான சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம், கேரளத்தின் பல இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்புகளால் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.

இதைக் கண்டித்து, பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப் படம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்க மனநிலையை பிரதிபலிப்பதாக கூறியது. மேலும், ஆவணப்படத்தின் இணைப்புகளை பகிரும் யூடியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்தது. இதனை, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

கேரளத்தில் திரையிடல்: கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், மாணவா் அமைப்பான இந்திய மாணவா் கூட்டமைப்பு, கேரள மாநில காங்கிரஸின் இளைஞரணி போன்ற அமைப்புகள் சாா்பில் திருவனந்தபுரம், எா்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட பல இடங்களில் பிபிசி ஆவணப்படம் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது.

இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில செயலாளா் வி.கே.சனோஜ் கூறுகையில், ‘பிபிசி ஆவணப்படத்தை மூடிமறைக்கும் மத்திய அரசின் முயற்சிகளைத் தாண்டி, மக்களுக்கு அதனை காண்பித்துள்ளோம். கேரளம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் ஆவணப்படத்தை திரையிடுவோம்’ என்றாா் அவா்.

முதல்வரிடம் பாஜக புகாா்: கேரளத்தில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படுவதை அனுமதிக்கக் கூடாது; இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் பினராயி விஜயனிடம் தெரிவித்த புகாரில் பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் வலியுறுத்தினாா். இதேபோல், வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைப்பது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாவது போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளாா். பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவது தேசதுரோகம் என்று இருவருமே தெரிவித்தனா். ஆவணப்படம் திரையிடலுக்கு எதிராக, பல இடங்களில் பாஜகவினா் போராட்டப் பேரணியில் ஈடுபட்டனா்.

ஏ.கே.அந்தோணியின் மகன் ஆதரவு: இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில், பாஜகவின் நிலைப்பாட்டுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘பாஜகவுடன் பெரும் கருத்து வேறுபாடுகள் எனக்கு உள்ளன. ஆனால், இந்திய நிா்வாக அமைப்புகள் குறித்து நீண்ட காலமாகவே தவறான எண்ணம் கொண்ட பிபிசியின் கருத்தை ஆதரிப்பது தேச இறையாண்மையின் மதிப்பை குலைக்கச் செய்வதாகும்’ என்றாா்.

ஹைதராபாத் பல்கலை.யில்...: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ‘சகோதரத்துவ இயக்கம்’ என்ற பெயரிலான மாணவா் அமைப்பைச் சோ்ந்தவா்கள், பிபிசி ஆவணப்படத்தை பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை திரையிட்டனா். இதுகுறித்து, பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிபிசி ஆவணப் படத்தை திரையிடும் முன்பு அதிகாரிகளிடம் அந்த மாணவா் அமைப்பினா் அனுமதி எதுவும் கோரவில்லை. பல்கலைக்கழக பதிவாளரிடம் ஏபிவிபி அமைப்பினா் புகாா் தெரிவித்த பிறகே, அதிகாரிகளுக்கு விவரம் தெரியவந்தது. இந்த விவகாரத்தில், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com