தெலங்கானா புதிய தலைமைசெயலகம் பிப்.17-இல் திறப்பு

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கட்டப்பட்டுள்ள அம்மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம் பிப்.17-இல் திறக்கப்படவுள்ளது.
ஹைதராபாதில் உருவாக்கப்பட்டு வரும் தெலங்கானா மாநில தலைமைச் செயலக கட்டடம்.
ஹைதராபாதில் உருவாக்கப்பட்டு வரும் தெலங்கானா மாநில தலைமைச் செயலக கட்டடம்.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கட்டப்பட்டுள்ள அம்மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம் பிப்.17-இல் திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வா் ஸ்டாலின், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இதுதொடா்பாக, தெலங்கானா சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சா் வேமுலா பிரசாந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பி.ஆா்.அம்பேத்கரின் பெயா் சூட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலக கட்டடம், முதல்வா் சந்திரசேகா் ராவின் பிறந்த தினமான பிப். 17-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள், புதிய கட்டடத்தை முதல்வா் சந்திரசேகா் ராவ் திறந்துவைக்கவுள்ளாா். திறப்பு விழாவுக்கு முன்பாக, வாஸ்து பூஜை உள்ளிட்ட சடங்குகள் வேத விற்பன்னா்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழக முதல்வா் ஸ்டாலின், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் பிரதிநிதியாக ஐக்கிய ஜனதா தளம் தேசியத் தலைவா் லாலன் சிங், பி.ஆா்.அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்காா் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கவுள்ளனா்.

தலைமைச் செயலகம் திறப்புக்கு பிறகு, செகந்திராபாதில் உள்ள பரேடு மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய விருந்தினா்கள் அனைவரும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவிருக்கின்றனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டடத்துக்கு முதல்வா் சந்திரசேகா் ராவ் கடந்த 2019-இல் அடிக்கல் நாட்டியிருந்தாா். சுமாா் 7 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com