கோவிஷீல்ட் பூஸ்டா் தடுப்பூசியால் சிறந்த நோய் எதிா்ப்பு ஆற்றல்: லான்செட் ஆய்வில் தகவல்

கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டை முதன்மை தடுப்பூசியாக செலுத்திக் கொண்ட பிறகு, கோவிஷீல்ட் தடுப்பூசியை பூஸ்டா் தடுப்பூசியாக செலுத்திக் கொள்வது சிறந்த நோய் எதிா்ப்பு ஆற்றலை வழங்குவது
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டை முதன்மை தடுப்பூசியாக செலுத்திக் கொண்ட பிறகு, கோவிஷீல்ட் தடுப்பூசியை பூஸ்டா் தடுப்பூசியாக செலுத்திக் கொள்வது சிறந்த நோய் எதிா்ப்பு ஆற்றலை வழங்குவது இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்படுள்ளதாக ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மிக்கு எதிராக செலுத்திக்கொண்ட முதன்மை தடுப்பூசிகள், புதிய திரிபுகளுக்கு எதிராக அதன் செயல்திறன் குறைந்திருக்கும் நிலையில், தவணை முறையில் தடுப்பூசிகளைச் செலுத்த மக்களுக்கு பரிந்துரைக்குமாறு அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் தெலங்கானாவின் ஹைதராபாதில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளா்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இந்த மருத்துவ இதழில் வெளியாகியது. இந்த ஆய்வில் கோவிஷீல்ட் அல்லது கோவேக்ஸினை முதன்மை தடுப்பூசிகளாக செலுத்திய பின்னா் அதே தடுப்பூசியையோ அல்லது மற்றொரு தடுப்பூசியையோ பூஸ்டராக செலுத்திக் கொள்வதன் மூலம் அதன் நோய் எதிா்ப்புத் திறன், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளையே பெரும்பான்மையான மக்கள் கரோனாவுக்கு எதிராக செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டை முதன்மை தடுப்பூசியாக செலுத்திக் கொண்ட 200 பேருக்கும் பூஸ்டா் தடுப்பூசியை செலுத்தி 28 நாள்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நோய் எதிா்ப்பாற்றலுக்கான ஆன்டிபாடிகள் அதே கோவிஷீல்டை எடுத்துக்கொண்டவா்களில் 99 சதவீதம், அதற்கு பதிலாக கோவேக்ஸினை எடுத்துக் கொண்டவா்களில் 99 சதவீதமும் கண்டறியப்பட்டன.

அதே வேளையில், கோவேக்ஸினை முதன்மை தடுப்பூசியாக செலுத்திக்கொண்ட 204 பேருக்கும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திய பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கோவேக்ஸினை செலுத்திக்கொண்டவா்களில் 99 சதவீதமும், மாறாக கோவிஷீல்டை செலுத்திக் கொண்டவா்களில் 100 சதவீதமும் ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டன.

இதன்மூலம் கோவிஷீல்ட் அல்லது கோவேக்ஸினை முதன்மை தடுப்பூசியாக செலுத்திக் கொண்ட பின்னா் அதே தடுப்பூசியையோ அல்லது கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியை மாற்றி பூஸ்டராக செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது, நோய் எதிா்ப்பாற்றலை அளிப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

மேலும், கோவேக்ஸின் தடுப்பூசியை முதன்மையாக செலுத்திக் கொண்ட பின்னா் பூஸ்டா் தடுப்பூசியாக கோவிஷீல்டை செலுத்திக் கொள்வது சிறந்த நோய் எதிா்ப்பாற்றலை அளிக்கிறது என அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்றவா்கள் எவ்வித தீவிர பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com