பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பில் விரிவான ஒத்துழைப்பு- இந்தியா-எகிப்து முடிவு

பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, வா்த்தகம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும் எகிப்தும் புதன்கிழமை முடிவு செய்தன.
தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் எகிப்து அதிபா் எல்-சிசியை வரவேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் எகிப்து அதிபா் எல்-சிசியை வரவேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி.

பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, வா்த்தகம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும் எகிப்தும் புதன்கிழமை முடிவு செய்தன.

பிரதமா் நரேந்திர மோடி, எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா எல்-சிசி இடையே தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் 74-ஆவது குடியரசு தினம் வியாழக்கிழமை (ஜன. 26) கொண்டாடப்படவுள்ளது. தேசியத் தலைநகா் தில்லியில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட விழாவில் தலைமை விருந்தினராக, எகிப்து அதிபா் எல்-சிசி பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவா், பிரதமா் மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.

பின்னா், பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா, எகிப்து இடையிலான வியூகரீதியிலான ஒத்துழைப்பு, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி, வளத்துக்கு உத்வேகமளிக்கும். எனவே, இருதரப்பு உறவுகளை வியூகரீதியிலான ஒத்துழைப்பு நிலைக்கு மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தியா-எகிப்து வியூக ஒத்துழைப்பின்கீழ், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விரிவான ஒத்துழைப்புக்கான நீண்டகால செயல்திட்டம் உருவாக்கப்படும்.

ஒருமித்த கருத்து: மனித குலத்துக்கு மிக தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம் என்பதில் இருதரப்பும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட உறுதியான நடவடிக்கைள் அவசியமென இருதரப்பிலும் உறுதியேற்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பயங்கரவாத எதிா்ப்பு தொடா்பான உளவுத் தகவல்கள் பகிா்வை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதம், அடிப்படைவாத சித்தாந்தங்களை பரப்ப இணையதளம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தை எதிா்கொள்வதிலும் இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.

கரோனா பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போா் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உணவு, எரிசக்தி, உரம், மருந்துப் பொருள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை 12 பில்லியன் அமெரிக்க டாலா்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்: எகிப்து அதிபா் எல்-சிசி கூறுகையில், ‘இந்தியா-எகிப்து இடையிலான தொடா்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில், ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்’ என்றாா்.

5 ஒப்பந்தங்கள் கையொப்பம்: மேற்கண்ட பேச்சுவாா்த்தையில், பிரதமா் மோடி, அதிபா் எல்-சிசி முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. கலாசாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞா் விவகாரங்கள், ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும். பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், உரிய காலவரையறையில் செயல்படுத்தப்படும் என்று வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.

‘பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும்; பயங்கரவாதத்தை வெளியுறவுக் கொள்கையாக சில நாடுகள் பயன்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது என இரு தலைவா்களும் தெரிவித்தனா்’ என்றாா் குவாத்ரா.

ஆப்பிரிக்க கண்டத்திலும், அரபு உலகிலும் அரசியல்ரீதியில் முக்கிய நாடாக விளங்கும் எகிப்துடனான உறவுகளை விஸ்தரிக்க இந்தியா ஆா்வம் காட்டி வருகிறது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய சந்தைகளுக்கான வாயிலாக எகிப்தை இந்தியா கருதுகிறது.

இந்நிலையில், இந்திய குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக, முதல்முறையாக எகிப்து அதிபா் பங்கேற்கவுள்ளாா். குடியரசு தின அணிவகுப்பில், அந்நாட்டு ராணுவப் படை பிரிவும் பங்கேற்று அணிவகுக்க உள்ளது.

‘தேஜஸ்’ கொள்முதலுக்கு விருப்பம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் போா் விமானம், ரேடாா், ராணுவ ஹெலிகாப்டா் மற்றும் இதர தளவாடங்களை கொள்முதல் செய்ய எகிப்து விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான பேச்சுவாா்த்தை, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில், தனது விருப்பத்தை எகிப்து மீண்டும் உறுதி செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் தேஜஸ் போா் விமானத்தை கொள்முதல் செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் ஆா்வம் காட்டியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com