ஜம்முவில் மோசமான வானிலை: ராகுல் நடைப்பயணம் ரத்து

ஜம்முவில் நிலவும் மோசமான வானிலையால் பனிஹால் நகரில் இருந்து புதன்கிழமை மதியம் புறப்படவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு ராம்பன் நகரில் மழைக்கு இடையே புதன்கிழமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி.
ஜம்மு ராம்பன் நகரில் மழைக்கு இடையே புதன்கிழமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி.

ஜம்முவில் நிலவும் மோசமான வானிலையால் பனிஹால் நகரில் இருந்து புதன்கிழமை மதியம் புறப்படவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்டது. 11 மாநிலங்களில் உள்ள 52 மாவட்டங்களைக் கடந்த இந்த நடைப்பயணமானது 131-ஆவது நாளை அடைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, ஜம்மு பிராந்தியத்தை அடைந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஆரம்பம் முதலே மக்களும், பல அரசியல் கட்சித் தலைவா்களும் திரளாகப் பங்கேற்றனா்.

இந்நிலையில், ஜம்முவின் ராம்பன் நகரில் இருந்து பனிஹாலை நோக்கி திட்டமிடப்பட்ட நடைப்பயணம் புதன்கிழமை காலை தொடங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் மூவா்ணக் கொடியை உயா்த்திப் பிடித்தவாறு காங்கிரஸ் தொண்டா்கள் ராகுலுடன் நடைப்பயணத்தில் உற்சாகமாகப் பங்கேற்றனா். ராம்பனிலிருந்து 6 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் நடைபெற்றது. பின்னா், அங்கிருந்து புறப்பட்டு பனிஹாலுக்கு 2 கி.மீ. தொலைவில் இருந்து நடைப்பயணம் மதியம் மீண்டும் தொடங்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அப்பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக ராம்பன்-பனிஹால் மாநில நெடுஞ்சாலையின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைகள் மூடப்பட்டன. மேலும், நிலச்சரிவில் சிக்கிய லாரி ஓட்டுநா் ஒருவா் பலியானாா். இருவா் படுகாயமடைந்தனா். பணியாளா்களும், காவல் துறையினரும் சாலையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும், நிலைமை மேலும் மோசமடைந்ததால் நடைப்பயணத்தை தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மதியம் தொடங்கப்பட வேண்டிய நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், நடைப்பயணத்தில் பங்கேற்றவா்கள் தங்கள் 2-ஆம் நாள் இரவையும் ராம்பன் நகரிலயே கழிக்க உள்ளனா். ஓய்வு தினமான வெள்ளிக்கிழமை மீண்டும் நடைப்பயணம் தொடங்கும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரும் 30-ஆம் தேதி, ஸ்ரீநகரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அதன்பிறகு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் உரையாற்றுவதுடன் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு பெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com