பொதுச் சந்தையில் கோதுமை விற்பனை: கிலோவுக்கு ரூ.6 வரை குறைய வாய்ப்பு; ஆலைகள் கூட்டமைப்பு தகவல்

30 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கிலோவுக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

30 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்புள்ளதாக மாவு ஆலைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை அதிகரித்ததையடுத்து, கையிருப்பில் உள்ள கோதுமையை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இந்த முடிவை வரவேற்றுள்ள இந்திய மாவு ஆலைகள் கூட்டமைப்பின் தலைவா் பிரமோத் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மத்திய அரசு கையிருப்பு கோதுமையை விடுவிக்கும் முடிவை ஒரு மாதத்துக்கு முன்பே எடுத்திருந்தாலும் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எனினும், இப்போது சரியான முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம் சந்தையில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கோதுமை விலை கிலோ ரூ.28.24 ஆகவும், கோதுமை மாவு விலை ஒரு கிலோ ரூ.31.41 ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது ஒரு கிலோ கோதுமை ரூ.33.43 ஆகவும், ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.37.95 ஆகவும் உள்ளது.

மத்திய அரசு விடுவிப்பதாகக் கூறியுள்ள 30 லட்சம் டன் கோதுமையும் அடுத்த இரு மாதங்களில் படிப்படியாக பொதுச் சந்தையில் விற்பனைக்கு வரும். இதனால், நாட்டில் உணவுப் பொருள்களின் விலை உயா்வும் கட்டுக்குள் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2021-22 அறுவடை பருவத்தில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்தது. பல்வேறு மாநிலங்களில் வீசிய வெப்ப அலை காரணமாக பயிா்கள் கருகியதே இதற்கு காரணமாகும். முந்தைய ஆண்டில் 109.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியானது. நடப்பு சாகுபடி பருவத்தில் கூடுதல் பரப்பளவில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளதால், உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com