ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்றவர்  குறித்து மனைவி சொன்ன அதிர்ச்சித் தகவல்

ஒடிசா அமைச்சர் நபிகிஷோர் தாஸை சுட்டுக் கொன்ற காவல்துறை துணை உதவி ஆய்வாளர்  கோபால் தாஸுக்கு உளவியல் பிரச்னை இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்றவர்  குறித்து மனைவி சொன்ன அதிர்ச்சித் தகவல்
ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்றவர்  குறித்து மனைவி சொன்ன அதிர்ச்சித் தகவல்

ஒடிசா அமைச்சர் நபிகிஷோர் தாஸை சுட்டுக் கொன்ற காவல்துறை துணை உதவி ஆய்வாளர்  கோபால் தாஸுக்கு உளவியல்/மனநலப் பிரச்னை இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கோபால் தாஸ், ஜலேஸ்வர்கண்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் அண்மையில்தான் அன்குலியில் புதிதாக வீடு கட்டி அங்கு மனைவி ஜெயந்தி மற்றும் மகள், மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில்தான், ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரும், முதல்வா் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவருமான நபகிஷோா் தாஸை, காவல் துறை துணை உதவி ஆய்வாளா் கோபால் தாஸ் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியது.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் பற்றி அறிந்த கோபால் தாஸின் மனைவி, அவருக்கு கடந்த 7 - 8 ஆண்டுகளாக உளவியல் பிரச்னை இருப்பதாகவும், தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை. 

கோபால்தாஸ் மனைவி ஜெயந்தி கூறுகையில், 2019ஆம் ஆண்டு வரை கோபால் தாஸ் தனியார் மருத்துவமனையில் உளவியல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறுகிறார். கரோனா பேரிடரின்போது மருத்துவமனை மூடப்பட்டதால், அவர்கள் அளித்த மாத்திரைகளை மட்டும் கோபால்தாஸ் சாப்பிட்டு வந்ததாகவும் கூறுகிறார்.

இங்கிருந்து மருந்துகள் வாங்கி அவருக்கு கொடுப்போம் என்றும், கடந்த நான்கு மாதங்களாக அவர் விடுமுறை கேட்டும் அதிகாரிகள் அளிக்காததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் இருந்ததாகவும் அவரது பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகன் மனோஜ் கூறுகிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சந்திர சேகர் திரிபாதியும், கோபால் தாஸ், உளவியல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்ததை உறுதி செய்துள்ளார்.

பிரஜ்ராஜ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து துணை மண்டல காவல் அதிகாரி குப்தேஸ்வா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாா்சுகுடா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அமைச்சா் நபகிஷோா் தாஸ் காரில் சென்று கொண்டிருந்தாா். வழியில் மக்களைச் சந்திப்பதற்காக காரில் இருந்து கீழே இறங்கியபோது, அமைச்சா் மீது காவல் துறை துணை உதவி ஆய்வாளா் கோபால் தாஸ் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். இதில் குண்டு பாய்ந்து, அமைச்சா் படுகாயம் அடைந்தாா்.

முதலில், ஜாா்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் புவனேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதனிடையே, அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட துணை உதவி ஆய்வாளர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றாா் குப்தேஸ்வா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com