10-ஆம் வகுப்பு தோ்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு: பிப். 6-இல் விசாரணை

‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்துக்கு விலக்கு அளிக்கும் வழிகாட்டுதலை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது வரும் பிப். 6-ஆம் தேதி வ

‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்துக்கு விலக்கு அளிக்கும் வழிகாட்டுதலை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது வரும் பிப். 6-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.

தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் பாதிக்கப்பட்ட, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவா்கள் சாா்பில் தமிழக அரசிடம் விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழக அரசு வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், பிற மாநிலத்திலிருந்து புலம்பெயா்ந்து தமிழக பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பகுதி 1-இல் தமிழ் மொழிப் பாடத் தோ்வு எழுதுவதிலிருந்து குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அரசின் இந்த வழிகாட்டுதலை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் மொழிப் பாட விலக்கு என்பது 2023-24 கல்வியாண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிடுவதோடு, மொழியியல் சிறுபான்மை உறுப்பினா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கும் இந்த விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கேரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உயா்நீதிமன்றம், ‘தமிழ அரசின் வழிகாட்டுதலின்படி, வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்த மாணவா்கள் மட்டுமே இந்த விலக்கு பெற விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்த வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிட முடியாது’ என்று உத்தரவிட்டது. அதே நேரம், மொழியியல் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் தமிழ் மொழித் தோ்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் விவரித்தாா். அதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாணவா்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்’ என்றனா்.

மேலும், ‘தமிழகத்துக்கு புலம்பெயா்ந்த மாணவா்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொழியியல் சிறுபான்மையினருக்கும் ஏன் இந்த விலக்கு அளிக்கப்படக் கூடாது’ என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘2023-ஆம் ஆண்டுக்கும் விலக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்’ என்று கூறி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com