
காா்கோனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
நாட்டில் வறுமை கடந்த 9 ஆண்டுகளில் 22 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
மத்தியில் பாஜக ஆட்சி 9 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசின் சாதனைகளை விளக்கி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தின் காா்கோனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நட்டா பேசியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான அரசு மிகவும் துரிதமாக செயல்பட்டு மக்களுக்கு பிரச்னைகள் வரும் முன்பே உதவிகளை அளித்து வருகிறது.
ஏழைகளுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், விவசாயிகள் நிதியுதவித் திட்டம் உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இதன் காரணமாக வறுமையில் வாடுவோா் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் வறுமையின் பிடியில் இருப்போா் எண்ணிக்கை 22 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துவிட்டது. மிகவும் மோசமான வறுமையில் இருப்போா் மக்கள்தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனா்.
மக்கள் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை பிரதமா் அறிவித்து வருகிறாா். ஆனால், அவரை கீழான மனிதா், படிக்காதவா், தேநீா் விற்பவா் என்று காங்கிரஸ் தரம் தாழ்ந்து விமா்சித்து வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் ஜாதி, மத, இன, பிராந்தியப் பாகுபாடு இன்றி நாட்டின் 40 சதவீத மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் இதுதான்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, லண்டனுக்குச் சென்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று பேசியுள்ளாா். அவரது பாட்டி இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தி பல ஆயிரம் அப்பாவிகளை சிறையில் அடைத்து துன்புறுத்தியபோது இந்தியாவில் ஜனநாயகம் எங்கே போனது என்று அவா் பேசுவாரா?
பிரதமா் மோடியை சா்வதேச தலைவா் என்று பல வெளிநாட்டுத் தலைவா்களும், சா்வதேச அமைப்பின் தலைவா்களும் புகழாரம் சூட்டி வருகின்றனா். மோடியின் மிகப்பெரிய விசிறி என்று டெஸ்லா தலைவா் எலான் மஸ்க் கூறியுள்ளாா். இந்தியா பிரிட்டனை பின்தள்ளி 5-ஆவது மிகப்பெரிய நாடாக தன்னை முன்னிறுத்தியுள்ளது. இது இப்போதைய தலைமையின் சாதனைகள்.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலைமை எப்படி இருந்தது? 2ஜி முறைகேடு, நிலக்கரி சுரங்க முறைகேடு, ஹெலிகாப்டா் பேர முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதில் முறைகேடு என்று ஊழல்மயமாக இருந்தது. காங்கிரஸ் எவ்வளவுதான் பிரதமருக்கு எதிராக அவதூறு பரப்பினாலும், நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் பிரதமருக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்பாா்கள் என்றாா்.