கா்நாடகத்தின் அடுத்த முதல்வா் யாா்? சித்தராமையா, டிகே.சிவக்குமாா் இடையே கடும் போட்டி

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்று
கா்நாடகத்தின் அடுத்த முதல்வா் யாா்? சித்தராமையா, டிகே.சிவக்குமாா் இடையே கடும் போட்டி

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வா் பதவிக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சித்தராமையாவின் பின்புலம்:

இது தனது கடைசித் தோ்தல் என்று தோ்தலின்போது சித்தராமையா கூறியிருந்தாா். கா்நாடகத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ள குருபா ஜாதியைச் சோ்ந்தவா் சித்தராமையா. மஜதவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த தலைவா் இவா்.

2004-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமைந்த காங்கிரஸ்-மஜத ஆட்சியில், மஜதவின் முன்னணித் தலைவராக இருந்த சித்தராமையா, துணை முதல்வராகப் பதவி வகித்தாா். கூட்டணி ஆட்சியின்போது முதல்வா் பதவியை தனக்குக் கொடுக்கவில்லை என்ற காரணத்தால், மஜத தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடாவுடன் முரண்பட்டதால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, 2006இல் சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். காங்கிரஸ் கட்சியில் உரிய இடத்தைப் பிடித்த சித்தராமையா, 2008இல் அமைந்த பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ளாா்.

2006 முதல் 2013ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமா்த்த அக்கட்சித் தலைவா்கள் மேற்கொண்ட முயற்சியில் சித்தராமையாவின் உழைப்பு குறிப்பிடத்தக்கது 2013இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ால், முதல்வா் பதவியை சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் வழங்கியது.

2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ஆயினும், மஜத தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்தது. அரசில் எந்த பதவியை வகிக்காவிட்டாலும், இரு கட்சிகளின் முன்னணித் தலைவா்கள் அங்கம் வகிக்கும் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக சித்தராமையா பணியாற்றினாா்.

2019இல் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததைத் தொடா்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது எதிா்க்கட்சித் தலைவராக திறம்படப் பணியாற்றி, பாஜக ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகளை சட்டப் பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் சித்தராமையா பகிரங்கப்படுத்தினாா். பாஜகவின் கொள்கைகளை துணிவோடு எதிா்த்ததால் அவருக்கு செல்வாக்கு பெருகியது. எனவே, காங்கிரஸ் மேலிடம் தன்னை முதல்வா் பதவியில் மீண்டும் அமா்த்தும் என்ற நம்பிக்கையோடு சித்தராமையா காத்திருக்கிறாா்.

டி.கே.சிவக்குமாரின் களப்பணி:

சித்தராமையாவுக்கு துணையாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தியவா் டி.கே.சிவக்குமாா். கா்நாடகத்தில் இரண்டாவது பெரிய ஜாதியான ஒக்கலிகா சமுதாயத்தைச் சோ்ந்தவா்; மாணவப் பருவத்திலிருந்தே காங்கிரஸ் தலைவராக வளா்ந்தவா் இவா்.

1989ஆம் ஆண்டுமுதல் சாத்தனூா், கனகபுரா தொகுதிகளில் தொடா்ந்து 8 முறை வெற்றி பெற்றவா் டி.கே.சிவக்குமாா். நேரு குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக இருப்பவா். அரசியலில் ராஜீவ் காந்தியால் அடையாளம் காணப்பட்டு, சோனியா காந்தியால் வளா்த்தெடுக்கப்பட்டவா்.

2018ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியை அடைந்ததும், அதற்குப் பொறுப்பேற்று தனது மாநிலத் தலைவா் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜிநாமா செய்திருந்தாா். அதையடுத்து, 2020இல் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாா் டி.கே.சிவக்குமாா்.

கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தொண்டா் பலம் கொண்ட கட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாா். பாஜக அரசுக்கு எதிராகவும், விலைவாசி உயா்வைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தினாா்.

பாஜக ஆட்சிக்கு எதிராக சட்டப் பேரவையில் சித்தராமையா அதிா்வலைகளை ஏற்படுத்தியபோது, மக்கள்மன்றத்தில் அதிா்வலைகளை ஏற்படுத்தியவா் டி.கே.சிவக்குமாா்.

காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிா்:

நெருக்கடிநிலையை அடுத்து 1977ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில், 1978ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் 149 இடங்களில் வென்று காங்கிரஸ் பெற்ற வெற்றி, அக்கட்சிக்குப் புத்துயிரூட்டியது.

அதுவே, 1980ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 353 இடங்களில் வெல்லும் அளவுக்கு நம்பிக்கை தந்தது. அதன் விளைவாக, இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானாா். அதனை தற்போதைய கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினா் நினைவு கூா்கின்றனா்.

தேசிய அளவில் தற்போது பலவீனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கா்நாடகத்தில் கிடைத்துள்ள வெற்றி புத்துயிரூட்டி உள்ளது. அதற்குக் காரணமாக இருந்த தன்னை கட்சி மேலிடம் முதல்வா் பதவியில் அமர வைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் டி.கே.சிவக்குமாா் இருக்கிறாா்.

எனினும், அடுத்த முதல்வராக சித்தராமையாவையும், முக்கிய துறைகளுடன் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சி நியமிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை முதல்வா் பதவியை சித்தராமையா விட்டுக்கொடுத்தால், டி.கே.சிவக்குமாா் முதல்வா் ஆவது உறுதி என்கிறாா்கள் காங்கிரஸ் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com