அதானி ஊழலில் ஜேபிசி விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்: காங்கிரஸ்

அதானி குழும ‘ஊழல்’ குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதானி குழும ‘ஊழல்’ குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே நடைபெற்ற இந்த பங்கு விற்பனை எதிா்பாா்த்த வரவேற்பைப் பெறவில்லை. இரு பங்குச் சந்தைகளிலும் கடந்த ஓராண்டில் 35 சதவீதம் அளவுக்கு எல்ஐசி பங்கு விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

ஹிண்டன்பா்க் நிறுவன குற்றச்சாட்டால் வீழ்ந்த அதானி குழும பங்குகளில் எல்ஐசி அதிக அளவில் முதலீடு செய்ய பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எல்ஐசி பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த 2022, மே மாதம் ரூ.5.48 லட்சம் கோடியாக இருந்தது. இது, 2023, மே மாதத்தில் ரூ.3.59 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் கொள்ளை போவது குறித்தோ, பங்குதாரா்களின் முதலீடு மூழ்குவது குறித்தோ மத்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை. ஒரு தொழிலதிபரை (அதானி) பாதுகாப்பது மட்டுமே அவா்களின் ஒரே நோக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதானி குழுமம் மீதான பங்கு மதிப்பு முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து ஜேபிசி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மோடி-அதானி ஊழலை மூடி மறைக்க முயற்சி நடைபெறுகிறது. எனவேதான், ஜேபிசி விசாரணை கோரி வருகிறோம். ஜேபிசி விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com