அதிகார பலத்தைத் தாண்டி காங்கிரஸ் வெற்றி: ராகுல் உரை

பாஜகவின் பணம், செல்வாக்கு, அதிகாரபலத்தை தாண்டி கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் உரை
ராகுல் உரை


பெங்களூரு: பாஜகவின் பணம், செல்வாக்கு, அதிகாரபலத்தை தாண்டி கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கா்நாடகத்தின் 24-ஆவது முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, நிகழ்ச்சியின் நிறைவில் உரையாற்றினார். அப்போது, கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இனி கர்நாடகத்தில் மகளிர் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.  வாக்குறுதிப்படி, கர்நாடக மக்களுக்கு இலவசமாக 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். காங்கிரஸ் தலைமையிலான அரசு, மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்றும் ராகுல் கூறினார்.

மே 10-ஆம் தேதி நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. அதையடுத்து, ஐந்து நாட்கள் இழுபறிக்குப் பிறகு, மாநில முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி மேலிடத்தால் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, பெங்களூா், கஸ்தூா்பா சாலையில் அமைந்துள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் நண்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. விழாவில், கா்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமையா (75), துணை முதல்வராக டி.கே.சிவகுமாா் (61) ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். 

பெங்களூரு விதான சௌதா அல்லது ஆளுநா் மாளிகையில்தான் முதல்வா் பதவியேற்பு விழா நடப்பது வழக்கம். இந்த வழக்கத்திற்கு மாறாக, கடந்த 2013ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வராக சித்தராமையா பதவியேற்றபோது, பதவியேற்பு விழா கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடந்தது. இம்முறையும் பதவியேற்பு இங்கேயே நடத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பெங்களூரில் அமைந்திருக்கும் விதான சௌதா உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கண்டீரவா விளையாட்டுத் திடல் வண்ணக் கோலம் பூண்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com