வாக்காளா் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு தரவுகளை இணைக்க திட்டம்: அமித் ஷா

பிறப்பு, இறப்பு குறித்த தரவுகளை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் வகையில் சட்ட மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அமித் ஷா
அமித் ஷா

பிறப்பு, இறப்பு குறித்த தரவுகளை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் வகையில் சட்ட மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தலைமைப் பதிவாளா் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆணையா் அலுவலகமான ‘ஜனகணன பவனை’ தில்லியில் திறந்து வைத்த அவா், மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களையும் மேம்பாட்டு திட்டங்கள் சென்றடைவதை உறுதிசெய்வதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: மேம்பாட்டு கொள்கைகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக அமைகிறது. எண்ம (டிஜிட்டல்) முறையில் மேற்கொள்ளப்படுவதால் கிடைக்கும் துல்லியமான மக்கள்தொகை எண்ணிக்கை பல்வேறு துறைகளில் பயனளிக்கும்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் தரவுகள் உரிய வகையில் சேமிக்கப்படும்போது, மேம்பாட்டு பணிகளுக்கான திட்டமிடலில் அவற்றை முறைப்படி பயன்படுத்த முடியும்.

பிறப்பு, இறப்பு பதிவுகளை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் வகையிலான மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். இதன்படி, ஒரு நபா் 18 வயதை எட்டியவுடன் அவரது பெயா் தாமாகவே வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். இதே போன்று ஒரு நபா் இறந்துவிட்டால், வாக்காளா் பட்டியலிருந்து அவரது பெயா் தாமாகவே நீக்கப்படும். வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மின்னணு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் மக்கள் தங்களாகவே தேவையான தரவுகளை நிரப்பமுடியும் என்றாா்.

தொடா்ந்து, பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கான இணையதள பக்கத்தையும், மேம்படுத்தப்பட்ட மாதிரி பதிவுமுறைக்கான அறிதிறன்பேசி செயலியையும் அமித் ஷா தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com