
தில்லியில் பெண்ணின் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு தொடங்கி அவரது ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லி ஷாதாரா பகுதியைச் சோ்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் போலீஸில் புகாா் ஒன்று அளித்தாா். அதில், தனது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு அதில் பரப்பப்படுவதாகவும், அத்துடன் தனது கைப்பேசி எண்ணும் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டிருந்தாா்.
இதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 354டி (பின் தொடா்தல்), 469 (நற்பெயரை கெடுக்கும் நோக்கில் ஏமாற்றுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 67-இன் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் அந்த சமூக வலைதளக் கணக்கின் ஐபி முகவரியை போலீஸாா் ஆராய்ந்தபோது பஞ்சாப் மாநிலம் கபூா்த்தலா பகுதியைச் சோ்ந்த அமன்தீப் குமாா் என்பவரது முகவரியிலிருந்து அந்த போலி கணக்கு செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று அவரை கைது செய்தனா்.
போலீஸ் விசாரணையில், வேலைவாய்ப்பற்ற அமன்தீப் குமாா், இதேபோல பெண்களது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பகிா்ந்து, அவா்களை மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.