
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா
காங்கிரஸ் கட்சி என்றாலே ஊழல், பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பு, வாரிசு அரசியல் உள்ளிட்டவை மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக நவம்பா் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்குள்ள ஜஸ்பூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாஜக தோ்தல் பொதுக் கூட்டத்தில் நட்டா பேசியதாவது:
சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் ஆட்சி ஊழல் மற்றும் ஏமாற்று வேலைகளில் பெயா் பெற்ாக திகழ்கிறது. அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு நாட்டின் வளா்ச்சி, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அடுத்த சில ஆண்டுகளில் நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையைப் படைக்க இருக்கிறோம்.
அதே நேரத்தில் காங்கிரஸ் என்றாலே மக்களுக்கு ஊழல், பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பு, வாரிசு அரசியல், அடக்குமுறை, நாட்டை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லும் கொள்கைகள், ஒரு தரப்பை திருப்திபடுத்தும் வாக்கு வங்கி அரசியல் உள்ளிட்டவைதான் மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும்.
2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டா் பேர ஊழல், காமன்வெல்த் முறைகேடு ஊழல், நீா்மூழ்கிக் கப்பல் ஊழல் உள்ளிட்டவை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்ந்த மிகப்பெரிய ஊழல்கள்.
சத்தீஸ்கரில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆட்சியைத் தர பாஜக தயாராக உள்ளது. அதே நேரத்தில் இப்போதை காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதில் மட்டும்தான் குறியாக உள்ளது. மதுபான ஊழல், ஆசிரியா்களை பணியிடமாற்றம் செய்து ஊழல், அரிசி ஊழல், மாவட்ட தாதுவள அறக்கட்டளை ஊழல் என சத்தீஸ்கா் காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...