
தேசிய மருந்தியல் ஆணையத்தை அமைப்பதற்கான தேசிய மருந்தியல் ஆணைய வரைவு மசோதா, 2023-ஐ மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
மருந்தியல் சட்டம்,1948-க்கு மாற்றாகக் கொண்டு வரப்பட உள்ள இந்த மசோதா, இந்திய மருந்தியல் கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய ஆணையத்தை அமைக்க வழிவகை செய்கிறது.
மருந்தியல் கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதையும் நாடு முழுவதும் திறன்வாய்ந்த மருந்தாளுநா்கள் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்வதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
மருந்தியல் கல்வி நிறுவனங்களை வெளிப்படையான முறையில் மதிப்பிடுதல், இந்தியாவுக்கான மருந்தியல் பதிவேட்டைப் பராமரித்தல், மருந்தாளுநா்களுக்கான நெறிமுறை விதிகளை அமல்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பான அம்சங்கள் இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மருந்தாளுநா்களுக்கான தேசிய பதிவேட்டை மருந்தியல் நெறிமுறைகள் மற்றும் பதிவு வாரியம் பராமரிக்கப்படும் எனவும் மாநில அளவில் பராமரிக்கப்படும் மருந்தாளுநா் பதிவேடு மற்றும் மருந்தியல் பதிவேடு தொடா்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்டு, 3 மாத காலத்துக்குள் ஆணையம் அல்லது வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் இந்த வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வரைவு மசோதா தொடா்பான கருத்துகளை மக்கள், மருந்தியல் துறை சாா்ந்தவா்கள் அடுத்த மாதம் 14-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...