‘வெறுப்புணர்வை நீக்க மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்’: ராகுல் காந்தி

தெலங்கானா தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் ராகுல் காந்தி மோடியைக் குறித்து விமர்சித்துள்ளார்.
பிரசாரத்தில் ராகுல் காந்தி
பிரசாரத்தில் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த நாட்டில் வளர்ந்துவரும் வெறுப்புணர்வை இல்லாமலாக்குவதே தனது இலக்கு எனத் தெலங்கானா தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். அந்த நோக்கத்திற்காகவே மத்தியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிவடையவுள்ள நிலையில், நம்பள்ளி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ், மோடி மற்றும் கடும்போக்குவாதிகள்தாம் ஒட்டுமொத்த நாட்டிலும் வெறுப்பைப் பரப்புகிறார்கள் என விமர்சித்தார்.

‘பாரதத்தை இணைப்போம்’ பாத யாத்திரையின்போது காங்கிரஸ் முன்வைத்த வாசகமான, ‘வெறுப்பு சந்தையில் அன்பிற்கான கடையைத் திறப்போம்’ என்பதைச் சுட்டிக் காட்டிய ராகுல், மோடியை விமர்சித்ததற்காக 24 வழக்குகள் தன்மீது பதியப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “முதல் முறை, அவதூறுக்காக, எனக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைத்துள்ளது. எனது சட்ட பேரவை பதவி பறிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த வீடு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனக்கு எதுவும் வேண்டியதில்லை. கோடிக்கணக்கான மக்களின் இதயங்கள் தான் என் வீடு” எனப் பேசியுள்ளார்.

மேலும், தெலங்கானாவில் செயல்பட்டு வரும் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் கட்சி பாஜகவிற்கு ஆதரவாக காங்கிரஸின் வாக்குகளைப் பிரிக்கச் செயல்படுவதாகவும் ஆளும் பிஆர்எஸ் கட்சியும் மத்தியில் பாஜகவின் ஆட்சியை ஆதரிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது இலக்கு இந்நாட்டில் வெறுப்புணர்வை நீக்க வேண்டும், அதற்கு மோடி தில்லியிலும் ஊழல் அரசாங்கம் நடத்தும் கேசிஆர் தெலங்கானாவிலும் தோற்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com