
மும்பையில், திருமணமாகாத இரண்டு சகோதரிகள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரத்தில் அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சகோதரிகளைக் கொலை செய்த கணேஷ் மொஹைத், உறவினர்களும், தங்களது தாயும் சேர்ந்து சகோதரிகளைக் கொலை செய்ததாக நாடகமாடிய நிலையில், அவரது செல்லிடப்பேசி தேடலும், வீட்டுக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவும் நடந்தது என்ன என்பதைக் காட்டிக்கொடுத்தன.
இதையும் படிக்க.. அதிகரிக்கும் மோசடி: ஆதார் பயோ-மெட்ரிக்கை லாக் செய்துவிட்டீர்களா?
நவராத்திரி விழாவுக்கு தனது குடும்பத்தை அழைத்துச் சென்ற கணேஷ், அங்கு வைத்து சகோதரிகளைக் கொலை செய்வது எனவும், தன் மீது சந்தேகம் வரும் என்பதால், உறவினர்கள் மீது திசைதிருப்பவும் திட்டமிட்டிருந்தார்.
நவராத்திரிக்கு அழைத்துச் செல்வதற்கு முன், சூப்பில் எலி விஷம் கலந்து கொடுத்துள்ளார். பிறகு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுக்குமாறு தாயிடம் கூறியுள்ளார். பிறகு நவராத்திரிக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள்.
அங்கு முதல் சகோதரி சோனாலிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்பா நடனமாடிக் கொண்டிருப்பதாக நடித்த கணேஷ் அவரை மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் மரணமடைந்தார். மற்றொரு சகோதரி சினேகாவும் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது, அவரிடம், தனது தாய்தான் தங்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார். இந்த நிலையில், சினேகாவும் மரணமடைய, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
உறவினர்களுடன் சொத்துப் பிரச்னை இருப்பதால், அந்த வகையில் திசைதிருப்ப கணேஷ் முயற்சிக்கிறார். அவர்களுக்கு தனது தாயும் உடந்தையாக இருந்ததாகவும் அவர் சந்தேகம் அடைந்ததாகக் கூறுகிறார். சூப் குடித்ததும் தாய் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்ததாகவும் அதில் விஷம் கலந்திருக்கலாம் என்றும் கணேஷ் கூற, உடனடியாக வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில், அதே தண்ணீரை தாயும் அருந்தியது பதிவாகியிருந்ததை கண்டுபிடித்தனர்.
கணேஷ் மீது ஒட்டுமொத்த விசாரணையும் திரும்ப, அவரது செல்லிடபேசியை ஆராய்ந்ததில், அவர் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் 53 விதங்களில் விஷம் வைத்துக் கொல்வது எப்படி, நிறமில்லாத விஷம் எது, வாசனையற்ற விஷம் எது, விஷம் வைத்தால் எத்தனை நாள்களுக்குள் மரணிப்பார்கள் என விதவிதமாக தேடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கணேஷின் தந்தை இறந்ததால், அவரது வனத்துறை அதிகாரி வேலையை வாரிசுக்கு வழங்க வேண்டும் என்றபோது, தந்தை வேலையைப் பெற கணேஷ் உறுதியாக இருந்ததாகவும், மகள்களில் ஒருவருக்க வேலையை கொடுக்க வேண்டும் என்று தாய் நினைத்ததாகவும் இந்த விவகாரத்தில்தான் சகோதரிகளைக் கொலை செய்ய கணேஷ் முடிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...