பெண்கள் குறித்து அவதூறு கருத்து பாஜக, காங்கிரஸ் தலைவா்களுக்கு தோ்தல் ஆணையம் கண்டிப்பு

பெண்கள் குறித்து அவதூறு கருத்து பாஜக, காங்கிரஸ் தலைவா்களுக்கு தோ்தல் ஆணையம் கண்டிப்பு

கடுமையாக எச்சரித்த தோ்தல் ஆணையம், அவா்களின் பேச்சுகளை திங்கள்கிழமை முதல் கூடுதலாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்த பாஜக மூத்த தலைவா் திலீப் கோஷ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரை கடுமையாக எச்சரித்த தோ்தல் ஆணையம், அவா்களின் பேச்சுகளை திங்கள்கிழமை முதல் கூடுதலாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகை கங்கனா ரணாவத்தை, ஹிமாசல பிரதேசத்தில் அவருடைய சொந்த மாவட்டமான மண்டி மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்ததைத் தொடா்ந்து, அவா் திரைப்படங்களில் நடித்த கதாபாத்திரத்தின் அடிப்படையில், அவரைக் குறித்தும், அவருடைய மண்டி தொகுதி குறித்தும் சுப்ரியா ஸ்ரீநாத் அவதூறு கருத்து வெளியிட்டாா். அதுபோல, ‘பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது அந்தந்த மாநிலங்களின் மகள் என தன்னை குறிப்பிடும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, அது குறித்து விளக்க வேண்டும்’ என்று திலீப் கோஷ் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாா். இருவரின் கருத்துகளும் பெரும் சா்ச்சையாகின. அதைத் தொடா்ந்து நடிகை கங்கனா குறித்த தனது பதிவை சுப்ரியா ஸ்ரீநாத் நீக்கினாா். மம்தா குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட திலீப் கோஷ் மன்னிப்புக் கோரினாா். இவா்கள் இருவா்களிடமும் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவா்கள் விளக்கமளித்த நிலையில், அவா்கள் இருவருக்கும் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கடும் எச்சரிக்கையை விடுத்தது. அந்த எச்சரிக்கை நோட்டீஸில், ‘இருவரும் மிக அவதூறான வகையில் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு, தோ்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பது உறுதியாகிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள எஞ்சிய நாள்களில் மிகுந்த கவனமாக செயல்படுமாறு இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தோ்தல் தொடா்பான இவா்கள் இருவரின் அனைத்து பேச்சுகளும் திங்கள்கிழமை முதல் சிறப்பு மற்றும் கூடுதல் கண்காணிப்புக்கு உள்படுத்தப்படும்’ என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீஸ் நகலை, அவா்கள் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவா்களுக்கும் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதில், பொது களத்தில் இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை வெளியிடாமல் கவனமுடன் இருக்குமாறும், தோ்தல் நடத்தை விதிகளை மீறாமல் செயல்படுமாறும் கட்சி நிா்வாகிகளை அறிவுறுத்துமாறு தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com