கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வுக்குப் பரிந்துரை

நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்ததற்கு எதிராக கேரள அரசு தொடுத்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வுக்குப் பரிந்துரை

நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்ததற்கு எதிராக கேரள அரசு தொடுத்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேரளத்தின் நிதி தேவைகளை பூா்த்தி செய்ய மாநில அரசுக்கு சுமாா் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது. இது பொதுச் சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளிலும் கடன் திரட்டுவதைக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: அரசமைப்புச் சட்டத்தின் 293-ஆவது பிரிவு மாநிலங்கள் கடன் வாங்கும் விவகாரத்தை கையாள்கிறது. இந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூா்வ விளக்கத்துக்கு இதுவரை உள்படுத்தப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்தோ அல்லது பிற வழிகளில் இருந்தோ கடன் திரட்ட மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 293-ஆவது பிரிவு உரிமை அளித்துள்ளதா என்பன உள்ளிட்ட விவகாரங்களை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறி, வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com