இந்திராவுக்கு அரசியல் மறுவாழ்வளித்த தொகுதி

இந்திராவுக்கு அரசியல் மறுவாழ்வளித்த தொகுதி

1975-ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனம் செய்த பிறகு, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் இந்திரா காந்தி, பிஎல்டி கட்சி வேட்பாளர் ராஜ்நாராயணிடம் 55,202 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் இந்திரா காந்தியின் தலைமை கேள்விக்குள்ளானது.

இந்த சோகத்தில் இருந்து விடுபட விரும்பிய இந்திரா காந்தி, தான் போட்டியிட்டால் உறுதியாக வெல்லலாம் என்று கருதியது, கர்நாடக மாநிலத்தைத்தான்.

இந்திரா காந்தி கர்நாடகத்தில் போட்டியிட விரும்புகிறார் என்றதும் சிக்மகளூரு மக்களவைத் தொகுதியில் 2-ஆவது முறையாக 1977-இல் வென்றிருந்த டி.பி.சந்திரே கெளடா, தனது பதவியை ராஜிநாமா செய்து இந்திரா காந்திக்கு வழிவிட்டார்.

அதைத் தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிக்மகளூரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் இந்திரா காந்தி காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார். "சின்ன மகள்' என்ற பொருள்படும் சிக்கமகளூரு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திரா காந்தி, "உங்கள் வாக்கை இந்த சின்ன மகளுக்குத் தாருங்கள்' என்று பிரசாரம் செய்தது, இன்றைக்கும் அத்தொகுதி மக்களால் நினைவு கூரப்படுகிறது. அத் தேர்தலில் மாட்டுவண்டியில் நின்றபடி இந்திரா காந்தி வாக்கு சேகரித்ததை நினைவூட்டும் அத்தொகுதி மக்கள், இந்திரா காந்தியைப் போன்ற தலைவரைப் பார்க்க முடியாது என்கிறார்கள்.

இந்திரா காந்தியைத் தோற்கடிக்க, அப்போது மத்தியில் ஆட்சி செய்து வந்த ஜனதா கட்சி தீவிரமாக உழைத்தது. ஆனாலும் மக்கள் செல்வாக்குடன் இந்திரா காந்தி அமோகமாக வெற்றி பெற்றார். அந்த வெற்றி, இந்திரா காந்தியை மீண்டும் தேசிய அரசியலில் ஒளிர வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com