தேசிய அரசியலில் சூடேற்றிய "வெங்காய' தொகுதி!

தேசிய அரசியலில் சூடேற்றிய "வெங்காய' தொகுதி!

1991-இல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தது. பி.வி.நரசிம்ம ராவ் பிரதமரானார். ஆனால், 1996-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அப்போதைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் சீதாராம் கேசரி மட்டுமல்லாது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராஜிநாமா கடிதம் கொடுத்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இதனால் காங்கிரஸ் சிதறியது.

ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியை தலைமையேற்குமாறு சில காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அந்த நிலையில், 1997-இல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தன்னை அடிப்படை உறுப்பினராக சேர்த்துக்கொண்ட சோனியா காந்திக்கு, 1998-ஆம் ஆண்டிலேயே அக்கட்சியின் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

இத்தாலி நாட்டுக் குடிமகளான சோனியா காந்தி, இந்திய நாட்டின் பிரதமராவதை ஏற்க முடியாதென்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் தனது தலைமையை நிலைநிறுத்த முடிவு செய்த சோனியா காந்தி, 1999-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். அங்கு அவரைத் தோற்கடிக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டதால், கர்நாடகத்தில் வெங்காயத்தின் விளைநிலமாகத் திகழும் பெல்லாரியிலும் போட்டியிட்டார்.

இத் தொகுதியிலும் சோனியா காந்தியைத் தோற்கடிக்க அப்போதைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பாஜக களமிறக்கியது. ஆனால், அந்தத் தேர்தலில் 56,100 வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி வென்றார்.

அந்தத் தேர்தலில் பாஜக தோற்றிருந்தாலும், கர்நாடகத்தில் அக்கட்சி காலூன்ற மிகவும் உதவியாக இருந்தது. பெல்லாரி தவிர அமேதி தொகுதியிலும் வென்ற சோனியா காந்தி, பெல்லாரி தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். அந்தத் தேர்தல் தேசிய அளவில் புயலைக் கிளப்பியதை இன்றைக்கும் அத்தொகுதி மக்கள் நினைவு கூர்கிறார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com