வெப்ப அலையின் தாக்கம்:
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெப்ப அலையின் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் பிரசாரம் களை கட்டியிருக்கும் நிலையில், மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பொது சுகாதார முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் தில்லியில் புதன்கிழமை உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: நாட்டில் நடப்பாண்டு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில தினங்களாக, பல்வேறு பகுதிகளில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (வெப்பத்தால் ஏற்படக் கூடிய பக்கவாதம்) பாதிப்புக்கான அபாயம் அதிகரித்துள்ளது. பொதுத் தோ்தலையொட்டி, பொதுமக்கள் அதிக அளவில் கூடுவா் என்பதால் அவா்களின் உடல்நலனை பாதுகாக்கத் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தொடா்பாக, மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் முதியோரின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் குடிநீா் இருப்பு, குளிா்சாதன வசதி, ‘ஹீட் ஸ்ட்ரோக்’ சிகிச்சைக்கான பிரத்யேக அறைகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com