மகனைத் தோற்கடிக்க தந்தை வேண்டுகோள்!

மகனைத் தோற்கடிக்க தந்தை வேண்டுகோள்!

திருவனந்தபுரம்: மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் எனது மகன் அனில் அந்தோணி தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி போட்டியிடுகிறார். இந்நிலையில், இது தொடர்பாக ஏ.கே.அந்தோணி, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடும் என் மகன் அனில் அந்தோணி தோற்க வேண்டும். அவர் சார்ந்துள்ள கட்சியும் (பாஜக) மக்களவைத் தேர்தலில் தோற்க வேண்டும். பத்தனம்திட்டாவில் என் மகனை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோணி வெற்றி பெற வேண்டும்.

இந்தத் தேர்தலானது இந்தியாவின் சிந்தனையையும் அதன் அரசியல் சாசனத்தையும் காப்பதற்கான தேர்தலாகும். எனவேதான், எனது உடல்நலப் பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு இத்தேர்தலில் எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த செய்தியாளர்களிடம் பேச வந்துள்ளேன். இத்தேர்தல், வாழ்வா சாவா என்ற போராட்டமாகும்.

எனது உடல்நலப் பிரச்னைகள் காரணமாகவே என்னால் காங்கிரஸýக்கு பிரசாரம் செய்ய திருவனந்தபுரத்தை விட்டு வெளியே வர இயலவில்லை. நான் பத்தனம்திட்டாவுக்கு சென்று பிரசாரம் செய்யாவிட்டாலும் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோணி வெற்றி பெறுவார்.

என்னைப் பொருத்த வரை குடும்பமும் அரசியலும் வேறுபட்டவை. இந்த நிலைப்பாடு எனக்குப் புதிதல்ல. இந்த நிலைப்பாட்டை காங்கிரஸின் மாநில அமைப்பான கேரள மாணவர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்த காலந்தொட்டு கடைப்பிடித்து வருகிறேன்.

இந்தியா என்ற கருத்தாக்கத்தையே சீரழிக்க மத்திய ஆளுங்கட்சி (பாஜக) முயற்சிக்கிறது. அந்த அபாயத்தை எவ்வாறு தடுப்பது என்பதே முக்கியமான கேள்வியாகும்.

கேரளத்தில் பாஜகவுக்கான சாதகமான சூழல் முடிந்துவிட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

கேரளத்தில் சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான விவகாரத்தை முன்னிறுத்தியதால் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சற்று கூடுதல் வாக்குகள் கிடைத்தன. எனினும் இந்த ஆண்டு அக்கட்சிக்கு சாதகமான அம்சம் ஏதுமில்லை.

இந்திய அரசியல்சாசனம் உருவாக்கப்பட்டதில் முதல்வர் பினராயி விஜயனுக்கோ அவரது கட்சிக்கோ எந்தப் பங்கும் இல்லை. இந்த விஷயத்தில் பெருமை முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸையும் அம்பேத்கரையுமே சேரும்.

இந்தியா பெற்ற சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. நேரு அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த அக்கட்சி விரும்பியது என்றார்.

தந்தையின் இந்தக் கருத்து தொடர்பாக அனில் அந்தோணி, பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில் "காங்கிரஸ் கட்சியில் காலாவதியாகி விட்ட தலைவர்களே உள்ளனர். பத்தனம்திட்டாவில் நான் வெற்றி பெறுவது உறுதி' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com