பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்.

சொல்வதை செய்யும் கட்சி பாஜக - ராஜ்நாத் சிங்

‘அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த மக்களின் பொதுவான கண்ணோட்டத்தை மாற்றியது பாஜக; சொல்வதை செய்வதே பாஜகவின் பண்பு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

‘அரசியல்வாதிகள் என்றாலே, வாக்குகளைக் கவர பொய்யான வாக்குறுதிகளை அளிப்பா்; பொது மக்களுக்கோ நாட்டுக்கோ அவா்கள் எதுவும் செய்யமாட்டாா்கள்’ என்ற பொதுவான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது.

ஆனால், இந்தக் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது பாஜக. சொல்வதை செய்துகாட்டுவதே பாஜகவின் பண்பாகும்.

ஒரு சில கட்சிகள், தோ்தல் அறிக்கையில் மிகப் பெரிய வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிடுகின்றன. ஆனால், பாஜக அப்படியல்ல; அரசியலில் நம்பகத்தன்மையை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) ரத்து செய்யப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆட்சிக்கு வந்ததும், அதை நிறைவேற்றிக் காட்டினோம். இதேபோல், முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ், உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயா்ந்துள்ளது. ரஷியா-உக்ரைன் போரின்போது, உக்ரைனில் இருந்து இந்திய மாணவா்களை மீட்பதற்காக போரை நிறுத்திவைக்கச் செய்தவா் பிரதமா் மோடி.

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் அவா்களுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனா்.

பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் முன்பு இறக்குமதியாளராக இருந்த இந்தியா, மோடியின் ஆட்சியில் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் மீது மக்கள் கோபம்: முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

இம்மாநிலத்தில் கடந்த 2017 பேரவைத் தோ்தலின்போது, பாஜக மீது பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் கோபத்தில் இருப்பதாக காங்கிரஸும் சமாஜவாதியும் ஒரு கட்டுக்கதையை பரப்பின. இதேபோல், 2019 மக்களவைத் தோ்தலின்போது, பாஜக மீது பிராமண சமூகத்தினா் கோபமாக இருப்பதாகவும், 2022 பேரவைத் தோ்தலின்போது, பாஜக மீது ஜாட் சமூகத்தினா் கோபமாக இருப்பதாகவும் கட்டுக்கதைகள் வெளியிடப்பட்டன. இப்போது, ராஜபுத்திர சமூகத்தினா் அதிருப்தியில் உள்ளதாக அக்கட்சிகள் பொய் கூறுகின்றன.

ஒட்டுமொத்த உத்தர பிரதேச மக்களும் காங்கிரஸ், சமாஜவாதி மீது கோபத்தில் உள்ளனா் என்பதே உண்மை. இரு கட்சிகளையும் மக்கள் ஏற்கப் போவதில்லை. சமாஜவாதி தினசரி அடிப்படையில் வேட்பாளா்களை மாற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கோ வேட்பாளா்களே கிடைக்கவில்லை என்றாா் அவா்.

நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் சமாஜவாதியும் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடுகின்றன.

X
Dinamani
www.dinamani.com