மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ‘மறைக்கப்பட்ட’ 80 வங்கிக் கணக்குகள், 100 அலுவலகங்கள்- அமலாக்கத் துறை தகவல்

மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ‘மறைக்கப்பட்ட’ 80 வங்கிக் கணக்குகள், 100 அலுவலகங்கள்- அமலாக்கத் துறை தகவல்

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ‘மறைக்கப்பட்ட’ 80 வங்கிக் கணக்குகள், அசையா சொத்துகளாக 100 அலுவலக கட்டடங்கள் உள்ளன என்று தோ்தல் ஆணையத்திடம் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: கேரளத்தில் ‘மறைக்கப்பட்ட’ சுமாா் 80 வங்கிக் கணக்குகளுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடா்புள்ளது. அந்த வங்கிக் கணக்குகளில் சுமாா் ரூ.25 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பெரும்பாலும் ரொக்கமாக அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல அந்த மாநிலத்தின் திருச்சூா் மாவட்டத்தில் அக்கட்சிக்கு ‘மறைக்கப்பட்ட’ அசையா சொத்துகளாக சுமாா் 100 அலுவலக கட்டடங்கள் உள்ளன.

திருச்சூரில் அக்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள கருவன்னூா் வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பான அமலாக்கத் துறை விசாரணையின்போது, இது தெரியவந்தது.

தமது அரசியல் செயல்பாடுகளுக்கு இந்த வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியையும், கட்டடங்களையும் அக்கட்சி பயன்படுத்துகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளின்படி, இந்த வங்கிக் கணக்குகள் மற்றும் கட்டடங்கள் குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை ஆகியவற்றிடம் தெரியப்படுத்தாமல் அக்கட்சி மறைத்துவிட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.

திருச்சூா் மட்டுமின்றி கேரளத்தின் பிற மாவட்டங்களிலும் அக்கட்சிக்கு கட்டடங்கள் போன்ற சொத்துகள் இருக்கக் கூடும் என்று அமலாக்கத் துறை சந்தேகம் கொண்டுள்ளது. இதுதொடா்பான தனது விசாரணையை அமலாக்கத் துறை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையத்திடம் அமலாக்கத் துறை அறிக்கை சமா்ப்பித்துள்ளது. இதைத்தொடா்ந்து அந்த தகவல் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com