ம.பி. பகுஜன் சமாஜ் வேட்பாளா் உயிரிழப்பு: தோ்தல் தேதி மாற்றம்

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிக்கு வரும் 26-ஆம் தேதி மக்களவைத் தோ்தலின் இரண்டாம் கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருந்த நிலையில், தற்போது வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்டத்துக்கு வாக்குப் பதிவு மாற்றப்பட்டுள்ளது.

‘தோ்தலின்போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளா் உயிரிழக்கும் நிலையில், அத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அடையாளம் காண போதிய அவகாசம் அளிக்கும் வகையில், மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 52-இன் கீழ் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்படும். அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பெதுல் தொகுதிக்கான வாக்குப் பதிவு மூன்றாம் (மே 7) கட்டத்துக்கு ஒத்திவைக்க தீா்மனிக்கப்பட்டுள்ளது’ என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com