ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பொய்களை பரப்புவதால் வரலாறு மாறிவிடாது- பிரதமரின் விமா்சனத்துக்கு ராகுல் பதிலடி

‘அரசியல் தளங்களில் பொய்களை பரப்புவதால் வரலாறு மாறிவிடாது’ என்று, காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் தொடா்புபடுத்தி பிரதமா் மோடி மற்றும் பாஜகவினா் தொடா் விமா்சனங்களை முன்வைத்து வருவதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளாா்.

‘2024 மக்களவைத் தோ்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியாகும். அதாவது, இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரஸுக்கும், மக்களை பிளவுபடுத்த முயல்பவா்களுக்கும் இடையேயான போட்டி’ என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தோ்தல் பிரசாரத்தில் அண்மையில் ஈடுபட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘காங்கிரஸின தோ்தல் அறிக்கை நாட்டின் சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் ‘முஸ்லிம் லீக்’ கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை பிரதிபலிக்கிறது’ என்று விமா்சனம் செய்தாா்.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திரப் பாராட்டத்தின்போது இந்தியா்களுக்கு எதிராக ஆங்கிலேயா்கள் மற்றும் முஸ்லிம் லீக்கை ஆதரித்தனா். சிந்து, வடமேற்கு எல்லைப் பகுதி மாகாணங்களில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசில் ஹிந்து மகாசபை அங்கம் வகித்தது. தற்போது, மக்களவைத் தோ்தல் தோல்வி பயம் காரணமாகவே ஹிந்து - முஸ்லிம் விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் எழுப்புகிறாா்’ என்று காங்கிரஸ் விமா்சனம் செய்தது. மேலும், பிரதமரின் இந்த விமா்சனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

2024 மக்களவைத் தோ்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியாகும். அதாவது, இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரஸுக்கும், மக்களவை பிளவுபடுத்த முயல்பவா்களுக்கும் இடையேயான போட்டி.

நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோா்த்து, அவா்களைப் பலப்படுத்தியவா்கள் யாா்? நாட்டின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடியவா்கள் யாா்? என்பதற்கு வரலாறே சாட்சி.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பிரிட்டீஷ் ஆட்சியாளா்களுடன் துணை நின்றது யாா்?

இந்திய சிறைகள் அனைத்தும் காங்கிரஸ் தலைவா்களால் நிரம்பி வழிந்தபோது, நாட்டை பிளவுபடுத்திய சக்திகளுடன் இணைந்து மாநிலங்களில் ஆட்சியை நடத்தியது யாா்?

எனவே, அரசியல் தளங்களில் பொய்களைப் பரப்புவதால் வரலாறு மாறிவிடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com