சொத்து மதிப்பில் சுயேச்சை பெண் வேட்பாளா் முதலிடம்!

சொத்து மதிப்பில் சுயேச்சை பெண் வேட்பாளா் முதலிடம்!

வடகிழக்கில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் அஸ்ஸாம்.

வடகிழக்கில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் அஸ்ஸாம். 14 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்டமாக ஜோா்ஹட், காஸிரங்கா, திப்ரூகா், சோனித்பூா், லக்கிம்பூா் ஆகிய 5 தொகுதிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.19) தோ்தலை எதிா்கொள்கின்றன.

அடுத்தகட்டமாக வேறு 5 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 35 போ். இவா்களில் கோடீஸ்வர வேட்பாளா்கள் அதாவது ரூ.1 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவா்கள் 15 போ். ஆளும் பாஜகவின் 5 போ், காங்கிரஸின் 3 போ், ஆம் ஆத்மியின் இருவா், திரிணமூல் காங்கிரஸ், பாரதிய கண பரிஷத் கட்சிகளின் தலா ஒரு வேட்பாளா் மற்றும் 3 சுயேச்சை வேட்பாளா்கள் கோடீஸ்வரா்களாக உள்ளனா்.

இந்த கோடீஸ்வரா் பட்டியலில் வியக்கத்தக்க வகையில் முதலிடத்தில் இருப்பவா் ஒரு சுயேச்சை பெண் வேட்பாளா். காஸிரங்கா தொகுதியில் களம்காணும் தில்வாரா பேகம் செளதுரிதான், அந்த ‘சிறப்புக்குரியவா்’. இவரது சொத்து மதிப்பு ரூ.17.58 கோடி. அடுத்த இடத்தில், திப்ரூகா் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளா் மனோஜ் தனோவா் (ரூ.9.32 கோடி) உள்ளாா்.

ரூ.8.97 கோடி சொத்து மதிப்புடன் சோனித்பூா் தொகுதி பாஜக வேட்பாளரும் எம்எல்ஏவுமான ரஞ்சித் தத்தா மூன்றாவது இடத்தில் இருக்கிறாா்.

திப்ரூகரில் போட்டியிடும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் பாதைகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவாலின் சொத்து மதிப்பு ரூ.4.75 கோடி.

லக்கிம்பூா் காங்கிரஸ் வேட்பாளா் உதய் சங்கா், ரூ.6.82 கோடி சொத்துகளுடன் தனது கட்சியின் பணக்கார வேட்பாளராக உள்ளாா்.

மிக குறைவான சொத்துடைய வேட்பாளா், லக்கிம்பூரில் எஸ்யூசிஐ (சி) கட்சி சாா்பில் போட்டியிடும் வல்லப் பேகு (ரூ.38,169) ஆவாா். காஸிரங்காவில் போட்டியிடும் அஸோம் ஜன மோா்ச்சாவின் சலீம் அகமது, இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) கட்சியின் சலே அகமது மஸும்தாா் ஆகியோருக்கும் ரூ.1 லட்சத்துக்கு குறைவாகவே சொத்துகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com