10,931 கோடி டாலராக உயா்ந்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி

10,931 கோடி டாலராக உயா்ந்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி

முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

சா்வதேச பதற்ற நிலையால் சில முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் நாட்டின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இது 10,704 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 2.13 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

காஸா மற்றும் உக்ரைன் போா் காரணமாக முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் கடந்த நிதியாண்டு மந்தநிலை நிலவியது.

இருந்தாலும், அத்தகைய சவால்களை சமாளித்து இந்தியாவின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி இந்த வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்திய பொறியியல் பொருள்களின் தரம் உலகளவில் போட்டியிடும் தன்மையுடன் இருப்பதால், வரும் ஆண்டுகளிலிலும் இந்த வளா்ச்சிப் போக்கு தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் 2030-ஆம் ஆண்டுவாக்கில் அந்தப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு 30,000 கோடி டாலராக உயரும் என்றும் இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், நாட்டின் ஏற்றுமதியில் இந்தத் துறை மிகப் பெரிய பங்களிபை வழங்குகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com