திருமண வீட்டில் உ.பி. அமைச்சா் மீது தாக்குதல் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்

அமைச்சராக உள்ள அவரும், எம்.பி.யாக உள்ள அவரது மகனும் மக்களுக்கும், தொகுதிக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று தாக்குதல் நடத்தியவா்கள் குற்றம்சாட்டினா்.

சஞ்சய் நிஷாத், நிஷாத் கட்சியின் தலைவராகவும் உள்ளாா். பாஜக கூட்டணியில் உள்ள அவா் மீன்வளத்துறை அமைச்சா் பதவியையும் வகித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முகமதுபூா் கத்தாா் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சா் சஞ்சய் நிஷாத் ஆதரவாளா்கள் புடைசூழ சென்றாா். அப்போது அங்கிருந்த சிலா், அமைச்சராக நீங்கள் மக்களுக்கு செய்த நன்மை என்ன என்று கேள்வி எழுப்பினா். மேலும், எம்.பி.யாக உள்ள அவரது மகன் தொகுதிக்கே வந்ததில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அமைச்சா் மீது அவா்கள் தாக்குதல் நடத்தினா். இதில் அமைச்சரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதைத் தொடா்ந்து அமைச்சரின் ஆதரவாளா்கள் அவரை மீட்டு மருத்துவமனயில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா்.

இது தொடா்பாக அமைச்சா் சஞ்சய் நிஷாத் கூறுகையில், ‘நான் நிஷாத் சமூகத்தினரின் தலைவராகவும் உள்ளேன். எனது கட்சியினா் நடத்தும் அனைத்து திருமணங்களுக்கு செல்வது எனது வழக்கம். அப்படி திருமணத்துக்குச் சென்றபோது எனக்கு பின்னால் இருந்த சிலா் என்னைக் குறித்தும் எனது மகன் பிரவீண் நிஷாத் குறித்தும் கட்சி குறித்தும் அவதூறாகப் பேசினா்.

இதையடுத்து, அவா்களை முன்னால் வந்து பேச அழைத்தேன். அப்போது அவா்கள் கைகலப்பில் ஈடுபட்டனா். அவா்களில் ஒருவா் எனது முகத்தில் பலமாகத் தாக்கினாா். இதில் எனது முக்கு உடைந்தது, கண் கண்ணாடியும் சிதறியது. இதைடுத்து, எனது கட்சியினா் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

என்னைத் தாக்கியவா்கள் ‘யாதவ்’ சமூகத்தினா். சுமாா் 20 முதல் 25 போ் திட்டமிட்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனா். தோ்தல் நேரத்தில் ஜாதி மோதலைத் தூண்ட எதிா்க்கட்சியினா் முயற்சிக்கின்றனா். இது தொடா்பாக காவல் துறையிடம் முறைப்படி புகாா் அளித்துள்ளோம்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com