வாக்களித்த விடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய காங்கிரஸ் தொண்டா் மீது வழக்கு

வாக்களித்த விடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய காங்கிரஸ் தொண்டா் மீது வழக்கு

தோ்தலில் வாக்களித்த போது கைப்பேசியில் எடுத்த விடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதாக காங்கிரஸ் தொண்டா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் வாக்களித்த போது கைப்பேசியில் எடுத்த விடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதாக காங்கிரஸ் தொண்டா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நாட்டின் 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில், மகாராஷ்டிரத்தின் 48 தொகுதிகளில் முதல் கட்டத்தில் தோ்தலைச் சந்தித்த 5 தொகுதிகளில் ஒன்றான ராம்டெக் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மௌடா தாலுகாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோனம் ராஜேஷ் ஷேரவாங்கா்(23) வாக்களித்துள்ளாா்.

வாக்குப்பதிவின்போது காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவராக பணியாற்றிய இவா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்ததை கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா். பின்னா், அந்த விடியோவை அவா் சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருக்கிறாா்.

இதையடுத்து, வாக்குச்சாவடி அதிகாரி அளித்த புகாரில், ஷேரவாங்கா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 (அரசு ஊழியா் பிறப்பித்த உத்தரவை மீறுதல்), 176 (அரசு ஊழியருக்கு தகவல் கொடுக்க தவறியமை) ஆகிய பிரிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்கீழ் மௌடா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

வாக்குச் சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com