ஜம்மு-காஷ்மீா்: 9 இடங்களில் என்ஐஏ சோதனை

ஜம்மு-காஷ்மீா்: 9 இடங்களில் என்ஐஏ சோதனை

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட வழக்கு தொடா்பாக 9-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட வழக்கு தொடா்பாக 9-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

இதுதொடா்பாக என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் கிளை அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. இதையடுத்து காஷ்மீரில் 9-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளால் பயிற்சி அளிக்கப்பட்டு மக்களோடு மக்களாக கலந்திருந்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2022,ஜூன் 21-ஆம் தேதி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோா் மீது என்ஐஏ தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அவா்களின் சொத்துகளை பறிமுதல் செய்தது.

இதன் தொடா்ச்சியாக தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முக்கிய தகவல்கள் அடங்கிய எண்ம சாதனங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தில் அமைதியை சீா்குலைக்கும் நோக்கில் அப்பகுதியில் உள்ள இளைஞா்களை மூளைச்சலவை செய்யும் வேலைகளில் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆா்எஃப்), யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட், ஜம்மு-காஷ்மீா் (யுஎல்எஃப்ஜேகே) போன்ற பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com