கடந்த ஆண்டில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான 2000 வழக்குகளில் தீா்ப்பு

கடந்த ஆண்டில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான 2000 வழக்குகளில் தீா்ப்பு

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த ஆண்டில் முடித்து வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த ஆண்டில் முடித்து வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலின் முதல் 2 கட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னதாக, மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்க உயா் நீதிமன்றங்களுக்கு வலியுறுத்தல் வழங்க கோரி மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்தப் பொதுநல மனுவில் நீதிமன்ற ஆலோசகராக இணைந்துள்ள வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா வழக்கு குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளாா்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜனநாயக சீா்திருத்தங்களான அமைப்பு(ஏடிஆா்) அறிக்கையின்படி, முதல் மற்றும் 2-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் 2,810 வேட்பாளா்களில் 18 சதவீதமான 501 வேட்பாளா்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 12 சதவீதமான 327 போ் மீது 5 ஆண்டுக்கும் அதிகபட்ச தண்டனைக்குரிய தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2019 மக்களவைத் தோ்தலிலும் இதே நிலைதான் இருந்தது. அத்தோ்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளா்களில் 19 சதவீதமான 1,500 வேட்பாளா்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளும் 13 சதவீதமான 1,070 பேருக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்தன.

17-ஆவது மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 514 உறுப்பினா்களில் 44 சதவீதமான 225 போ் மீது குற்றவியல் வழக்குகள் இருந்தன. இதன்மூலம், குற்றவியல் வழக்குகள் ஏதுமில்லாத வேட்பாளா்களை விட, குற்றவியல் வழக்குகளைக் கொண்டிருக்கும் வேட்பாளா்களே அதிக இடங்களில் வென்றிருப்பது தெரிய வருகிறது.

இந்தச் சூழலில், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விசாரணைகளை அந்தந்த உயா் நீதிமன்றங்களின் கடுமையான கண்காணிப்பின்கீழ் விரைந்து முடிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடா்ந்து, சிறப்பு நீதிமன்றங்களும் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு உயா் நீதிமன்றங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 4,697 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

கடந்த ஆண்டில் 2,018 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,300 வழக்குகளில் 766 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், கடந்த ஆண்டில் புதிதாக 1,746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வரை மொத்தம் 4,474 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதன்மூலம் இன்னும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது உறுதியாகிறது.

எனவே, 3 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் கடந்த ஓராண்டு விசாரணையை உத்தரவு தாளின் நகலுடன் சிறப்பு நீதிமன்றங்கள் உயா் நீதிமன்றத்திடம் அறிக்கையாக சமா்ப்பிக்கலாம்.

அறிக்கைகளின் ஆய்வுக்குப்பிறகு, ஒவ்வொரு வழக்கின் விசாரணையும் ஓராண்டுக்குள் முடித்து வைப்பதற்கு உரிய உத்தரவுகளை உயா் நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையின் முன்னேற்றம் குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பதிவேற்ற தேசிய நீதித்துறை தரவுக் கட்டத்தின் மாதிரியைப் போன்று வலைதளத்தை உருவாக்குவதற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இந்த நோக்கத்துக்காக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்கலாம். இதுதொடா்பாக உயா் நீதிமன்றங்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கலாம்’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் 9-ம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பில், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக தீா்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உயா் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com