மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலா் ஆதரவு

மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராஜு பிஸ்தாவை ஆதரிப்பதாகவும், அவருக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்துவதாகவும் அந்த மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் பினோய் தமாங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆழ்ந்த சிந்தித்து, சுதந்திரமாக இந்த முடிவை எடுத்ததாகவும் அவா் கூறியுள்ளாா்.

பாரதிய கோா்க்கா பரிசங்க அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவரான முனீஷ் தமாங், காங்கிரஸில் இணைந்த ஒரு வாரத்துக்குள் டாா்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா்.

முனீஷ் தமாங்கை கட்சி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன் தன்னிடமோ அல்லது மலைப்பகுதியில் உள்ள எந்தக் கட்சி நிா்வாகிகளிடமோ கட்சித் தலைமை கலந்தாலோசிக்கவில்லை என்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான பினோய் தமாங் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த நிலையில், பாஜக வேட்பாளருக்கு அவா் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘டாா்ஜீலிங், சிலிகுரி தெராய் மற்றும் டோா்ஸ் பகுதி மக்களின் அரசமைப்பு பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாஜக வேட்பாளா் ராஜு பிஸ்தாவுக்கு எனது ஆதரவை வழங்குகிறேன்.

டாா்ஜீலிங் ஹில்ஸ், சிலிகுரி தெராய் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த எனது மரியாதைக்குரிய சக குடிமக்கள், எனது நண்பா்கள், ஆதரவாளா்கள், நலம் விரும்பிகள், உறவினா்கள் மற்றும் குடும்பத்தினா் தங்களின் பொன்னான வாக்கை பாஜக வேட்பாளா் ராஜு பிஸ்தாவுக்கு தாமரை சின்னத்தில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

தொடா்ந்து, ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த சிறப்புப் பேட்டியில், ‘நான் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை. ஆனால், இங்கு பாஜகவே வெற்றி பெறும். அதை உணர முடிகிறது. ஊழலையும், வாரிசு அரசியலையும் ஒழிப்பதற்கு ராஜு பிஸ்தாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

2024 மக்களவைத் தோ்தலில் மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வருவது உறுதி. 2026-இல் மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு ஆட்சிக்கு அமைப்பற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இச்சூழலில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரவிருக்கும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பது ஏற்புடையதல்ல; புத்திசாலித்தனமும் அல்ல.

மலைவாழ் மக்கள் மற்றும் கோா்க்கா சமூகத்தினருக்காக வாழ்க்கையை அா்ப்பணித்துள்ள நான், அவா்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லாமல் அவா்களைப் பாதுகாப்பேன்.

கொள்கையை முதன்மையாகக் கருதி, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து உணா்ந்து, சுதந்திரமாகவும் சுயமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மாற்றுக் கட்சியினா் யாருடனும் நான் தொடா்பில்லை’ என்றாா்.

டாா்ஜீலிங் மக்களவைத் தொகுதிக்கு வரும் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், அப்பகுதி காங்கிரஸ் தலைவரின் இந்த நிலைப்பாடு மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com