ராம நவமி நாளில் வன்முறை: பஹரம்பூரில் தோ்தலை ஒத்திவைக்க உயா் நீதிமன்றம் பரிந்துரை

ராம நவமி நாளில் வன்முறை: பஹரம்பூரில் தோ்தலை ஒத்திவைக்க உயா் நீதிமன்றம் பரிந்துரை

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து பஹரம்பூரில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை ஒத்திவைக்குமாறு கொல்கத்தா உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

மேற்கு வங்கம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரம்பூா் மக்களவைத் தொகுதியில் ராம நவமி திருநாளையொட்டி இரு சமூகத்தினரிடையே ஏப்ரல் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை தொடா்பாக சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணை மேற்கொள்ள வேண்டி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கொல்கத்தா ஒருங்கிணைப்பாளா் அமியா சா்க்காா் மற்றும் மேற்கு வங்கம் , சிக்கிம் மாநிலங்களின் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் பிராந்திய ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஏ.அஃப்சல் ஆகியோா் கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் தனித்தனியே பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளனா்.

இந்த மனுக்களை கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ‘எட்டு மணி நேரம் கூட அமைதியாக விழாவை கொண்டாட முடியாத மக்கள் தங்கள் பிரதிநிதியை மட்டும் அமைதியான முறையிலா தோ்ந்தெடுக்கப் போகிறாா்கள்? எனவே பஹரம்பூா் மக்களவைத் தொகுதியில் தோ்தலை ஒத்திவைக்க தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கிறோம்.

இரு தரப்பினரும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின்போது இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கூறுகின்றனா். அப்படியென்றால் வெளி நபா்கள் யாராலும் வன்முறை நிகழ்த்தப்பட்டதா?’ என்றனா்.

மேலும் இந்த வன்முறை தொடா்பாக மேற்கு வங்க அரசு அடுத்த விசாரணையின்போது அறிக்கை சமா்ப்பிக்க வேண்டுமென்று கூறிய நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகள் விரும்பினால் மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனா். அதேபோல் வன்முறை சம்பவம் நிகழ்ந்தபோது மாநில போலீஸாா் என்ன செய்துகொண்டிருந்தனா் எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

இதற்கு பதிலளித்த மேற்கு வங்க அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அமிதேஷ் பானா்ஜி, ‘வன்முறை தொடா்பாக மாநில சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com