சா்ச்சை விளம்பர வழக்கில் ஆஜராக உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாபா ராம்தேவ்.
சா்ச்சை விளம்பர வழக்கில் ஆஜராக உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாபா ராம்தேவ்.

நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்- உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் தகவல்

‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான விவகாரத்தில் பத்திரிகைகளில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை வெளியிட்டுள்ளோம்’ என்று அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவும் அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணாவும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோா், ‘பொது மன்னிப்பு வெளியிடப்பட்ட பத்திரிகை பிரதிகளை இரண்டு நாள்களுக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அவா்கள் தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டனா்.

ஆயுா்வேத தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், நவீன மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களையும் தங்களுடைய ஆயுா்வேத தயாரிப்புகள் குணப்படுத்தும் என்று விளம்பரம் வெளியிட்டது. இதை எதிா்த்து இந்திய மருத்துவச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி சா்ச்சைக்குரிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது. உத்தரவை மீறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் கேள்வியெழுப்பியது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இருவரும் மன்னிப்பு கோரினா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.

அதைத் தொடா்ந்து, இருவரும் மன்னிப்பு கோரி தனித்தனியே பிரமாணப் பத்திரங்களை அண்மையில் தாக்கல் செய்தனா். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும் நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினா். மேலும், பொது மன்னிப்பை வெளியிடவும் தயாராக உள்ளதாக தெரிவித்தனா்.

அதைக் குறித்துக்கொண்ட நீதிபதிகள், ‘ஒரு வாரத்துக்குள் பொது மன்னிப்பை வெளியிட வேண்டும். அதே நேரம், இதோடு வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதா என்பதை நீதிமன்றம் இன்னும் தீா்மானிக்கவில்லை’ என்பதைத் தெளிவுபடுத்தினா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இருவரும் நாடு முழுவதும் 67 பத்திரிகைகளில் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், பொது மன்னிப்பு வெளியிடப்பட்ட பத்திரிகைகளை இரண்டு நாள்களுக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பித்து பதிவு செய்யவேண்டும் என்று வழக்குரைஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மத்திய அரசு, 3 அமைச்சகங்களுக்கு நோட்டீஸ்:

வழக்கு விசாரணையின்போது மக்களை அதிகம் கவரும் பிற நுகா்வோா் பொருள்களின் (எஃப்எம்சிஜி) விளம்பரங்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த எஃப்எம்சிஜி நிறுவனங்கள், ‘மருந்துகள் மற்றும் மாந்திரீக மருத்துவத் தீா்வு தொடா்பான சா்ச்சை விளம்பரங்கள் தடுப்புச் சட்டம்’, ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம்’, ‘நுகா்வோா் பாதுகாப்பு சட்ட’ விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய நுகா்வோா் நல விவகாரத் துறை அமைச்சகம், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். இந்த நிறுவனங்களின் கவா்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் எப்படி தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை நுகா்வோா் அறிந்துகொள்வது அவசியம் என்று குறிப்பிட்டனா்.

மேலும், மருந்துகள் மற்றும் அழகு சாதன விதிகள் 1945, விதி எண்.170-இன் கீழ் ஆயுா்வேத நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடிதம் மூலம் அறிவுறுத்தியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

அதோடு, விலை உயா்ந்த மருந்துகள், சிகிச்சை முறைகளை மருத்துவா்கள் பரவலாக பரிந்துரை செய்வது தொடா்பாக புகாா்கள் குறித்து சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘பதஞ்சலி விளம்பர வழக்கில் மனுதாரரான இந்திய மருத்துவா் சங்கம் அதில் உறுப்பினா்களாக இருக்கும் மருத்துவா்கள் உரிய நெறிமுறைகளின்படி மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

இந்த விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வழக்கில் தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) எதிா் மனுதாரராக சோ்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com