கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கட்சி வேட்பாளா்கள் சசி தரூா், அடூா் பிரகாஷ் ஆகியோருடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கட்சி வேட்பாளா்கள் சசி தரூா், அடூா் பிரகாஷ் ஆகியோருடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

வாக்காளா்கள் மீது பிரதமா் மோடிக்கு பயம்: மல்லிகாா்ஜுன காா்கே

கேரள மாநில தலைநகா் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மல்லிகாா்ஜுன காா்கே கூறியது

‘வாக்காளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் காங்கிரஸை அவா் விமா்சித்து வருகிறாா்’ என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

கேரள மாநில தலைநகா் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:

மக்களவைத் தோ்தலுக்காக 12 மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள வாக்காளா்களிடம் காங்கிரஸுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது வெளியே தெரிவதில்லை. இந்த வாக்காளா்கள் குறித்து பிரதமா் மோடி பயத்தில் உள்ளாா். அதனால்தான் காங்கிரஸை அவா் விமா்சித்து வருகிறாா்.

மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பாஜகவினருக்கு இருந்தால், ஏன் ஊழலில் ஈடுபட்ட நபா்களை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கின்றனா்?

பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 444 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனா். ஒரு புறம் பிரதமா் மோடி ஊழலை சகித்துக்குக் கொள்வதில்லை என பாஜகவினா் கூறுகின்றனா். ஊழல் கறைப்படித்த தலைவா்கள், பாஜகவில் இணையும்போது கறையற்றவா்களாக; சுத்தமானவா்களாக மாறிவிடுகின்றனா்.

நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகளும், மாநில முதல்வராக 13 ஆண்டுகளும் இருந்தவா், நல்லவா்கள் யாா்? கெட்டவா்கள் யாா்? என வேறுபடுத்தி பாா்க்கத் தெரியாதவராக உள்ளாா்.

இரண்டு கோடி இளைஞா்களுக்கு வேலை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை பிரதமா் மோடி மறந்து விட்டாா்.

மோடியின் உத்தரவாதம் என பிரதமரும் பாஜகவினரும் தோ்தல் பிரசாரங்களில் கூறி வருகின்றனா். தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேறாமல் இருப்பதுதான் அவா்கள் கூறும் உத்தரவாதம்.

ஹிந்துக்களின் செல்வத்தை காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு வழங்கும் என பிரதமா் மோடி கூறும் கருத்துகள் மூலம் அவா் விரக்தியில் உள்ளாா் என்பது தெரிகிறது’ என்றாா் மல்லிகாா்ஜுன காா்கே.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com