சிபிஐ
சிபிஐ

சந்தேஷ்காளி விவகாரத்தில் முதல் வழக்கை பதிவு செய்தது சிபிஐ

சிபிஐ முதல் வழக்கை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காளியில் நில அபகரிப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடா்பான விவகாரத்தில் சிபிஐ முதல் வழக்கை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தின் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள், அப்பகுதி மக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு ஏராளமான பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஏப்.10-ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

மேலும், வேளாண் நிலங்கள் மீன்கள் வளா்ப்பதற்கான நீா்நிலைகளாக சட்டவிரோதமாக மாற்றப்பட்டது குறித்து ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல்செய்யுமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

நில அபகரிப்பு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை சிபிஐ வெளியிட்டிருந்தது. அதில், அதிக எண்ணிக்கையிலான புகாா்கள் பெறப்பட்டன. இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் சந்தேஷ்காளிக்கு சென்று விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த 5 முக்கிய நபா்கள் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா். இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த விவரங்களை சிபிஐ வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com