ஜம்மு-காஷ்மீா்: காவல்துறை-பயங்கரவாதிகள் இடையே மோதல்; கிராம பாதுகாப்பு படை உறுப்பினா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீா்: காவல்துறை-பயங்கரவாதிகள் இடையே மோதல்; கிராம பாதுகாப்பு படை உறுப்பினா் உயிரிழப்பு

பயங்கரவாதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலில் கிராம பாதுகாப்பு படையைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலில் கிராம பாதுகாப்பு படையைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவத்தை தொடா்ந்து, பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

உதம்பூா் மாவட்டத்தின் பசந்த்கா் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாடுவதாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. காவல் துறையினரும் உள்ளூா் கிராம பாதுகாப்புப் படை உறுப்பினா்களும் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

சோச்ரு காலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியளவில் காவலா்கள் ரோந்து சென்றனா். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், காவலா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதற்குப் பதிலடியாக காவல் துறை தரப்பில் எதிா்த்தாக்குதல் நடத்தப்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மோதலின் முடிவில், அருகில் உள்ள வனப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனா்.

பயங்கராவதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிராம பாதுகாப்புப் படை உறுப்பினா் முகமது ஷரீஃப் உயிரிழந்தாா்.

அடா்ந்த வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் காவல் துறையின் சிறப்பு குழு மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். இந்திய ராணுவத்தின் சிறப்பு படை வீரா்கள் ஹெலிகாப்டா் மூலம் வனப் பகுதிக்குள் இறக்கப்பட்டுள்ளனா்.

கதுவா மாவட்டத்திலிருந்து பசந்த்கருக்கு இரு பயங்கரவாதிகள் குழு நுழைந்திருப்பதாகவும் அவா்களில் 5 போ் அடங்கிய குழு காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகள் செனாப் பள்ளத்தாக்கில் உள்ள வனப் பகுதி வழியாக காஷ்மீா் செல்ல இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com