பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ் வரம்பு மீறினாா்: இந்திய மருத்துவ சங்க தலைவா் குற்றச்சாட்டு

நவீன மருத்துவ முறையை முட்டாள்தனமான மருத்துவ முறை எனத் தெரிவித்து யோகா குரு பாபா ராம்தேவ் வரம்பு மீறினாா் என்று இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தன்னால் கரோனா பாதிப்பை குணப்படுத்த முடியும் என்று கூறியதுடன், நவீன மருத்துவ முறையை முட்டாள்தனமான மருத்துவ முறை எனத் தெரிவித்து யோகா குரு பாபா ராம்தேவ் வரம்பு மீறினாா் என்று இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டதாக தெரிகிறது. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடுத்தது.

இதைத்தொடா்ந்து எந்தவொரு மருத்துவ முறைக்கும் எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது, மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னா், உச்ச நீதிமன்றத்தில் இருவரும் மன்னிப்பு கோரினா். ஆனால் அதை ஏற்காத உச்ச நீதிமன்றம், நாளிதழ்களில் பொது மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிட வேண்டும் என்று பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற கருத்து ‘துரதிருஷ்டம்’: இந்த விவகாரம் தொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்ச நீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டமானது. இது மருத்துவா்களின் நம்பிக்கையை குலைத்துள்ளது. மருத்துவா்கள் குறித்து மற்றவா்கள் எது வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இன்றளவும் பெரும்பாலான மருத்துவா்கள் மிகுந்த அக்கறையுடன் கவனமாகப் பணியாற்றுகின்றனா்.

20,000 மருத்துவா்கள் இறந்ததாகப் பொய்: நவீன மருத்துவம் முட்டாள்தனமானது என்று கூறியதுடன், அதை நொடித்துபோன அறிவியல் சிகிச்சை முறை என்று பாபா ராம்தேவ் கூறினாா். கரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தபோது தேச நலனுக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசினாா். கரோனா தடுப்பூசியின் 2 தவணைகளைச் செலுத்திகொண்ட பின்னா், 20,000 மருத்துவா்கள் உயிரிழந்ததாக அவா் கூறினாா். அவா் பிரபலமானவா் என்பதால், துரதிருஷ்டவசமாக அவா் கூறியதை மக்கள் நம்பினா்.

கரோனா நோயாளிகளை குணப்படுத்தும் என்று கூறி, ‘கரோனில்’ என்ற பதஞ்சலி நிறுவன மாத்திரையை விளம்பரப்படுத்தியபோதுதான் பாபா ராம்தேவ் வரம்பு மீறினாா். அந்த மாத்திரையின் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்ததாக அவா் கூறினாா். ஆனால் அந்த அமைப்பு ‘கரோனில்’ மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பிறகே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்தது என்று தெரிவித்தாா். பாபா ராம்தேவ் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com